10 ஜுலை 2022
Theological Education Sunday


Theological Education: Making of the Faithful

உண்மையுள்ளவர்களாக உருவாக்குதல்

மத்தேயு 13:1-9

•            கடவுள் யார்? அவருடைய தன்மை எப்படிப்பட்டது? அவருடைய செயற்பாடு எப்படிப்பட்டது? என்பதைக் குறித்து ஒரு தனி மனிதனோ அல்லது சமூகமோ புரிந்துகொள்ள முற்படுவது இறையியல் என நாம் அழைக்கின்றோம். இவ்விலக்கினை நாம் அடைவதற்கு கடவுளின் செயற்பாடு, திருமறை, திருச்சபை, பாரம்பரியம், வரலாறு, அனுபவம் போன்றவைகள் உதவுகின்றன. ஒரு மனிதன் தான் இறைவனைக் குறித்து கொண்டுள்ள புரிந்துணர்வினை இன்னுமொருவருக்கு எடுத்துக் கூறுவதற்கு இறையியற் கல்வி அவசியமாகின்றது.

•            முதலாம் உடன்படிக்கை வாசகத்தின்படி யோசுவா 4:1-9ல் யோர்தான் நதியை இஸ்ரவேல் மக்கள் கடக்கும் புதுமையை நாம் பார்க்கின்றோம். இதன்பின்னர், யோசுவா இச்செயலை ஞாபகப்படுத்தும் வகையிலும் மக்களை தூய்மைப்படுத்தும் வகையிலும் சாட்சிகளாக கற்களை வைக்கின்றான். எமது இறையியல் கல்வியிலும் இறைவனுக்காக உயிருள்ள கற்களான சாட்சிகள் நாங்களே எனப் பேதுரு கூறுகின்றார்.

•            இறையியற் கல்வியில் திருமறை முக்கியமானதாகும். படைப்பில் பயன்படுத்தப்பட்ட வார்த்தை, இறைவாக்கினர்களுக்கூடாக பேசப்பட்ட வார்த்தை, மனுவுருவாகிய வார்த்தை, எழுதப்பட்ட வார்த்தை ஆகிய வார்த்தைகளில் தியானமாயிருக்க நாம் அழைக்கப்படுகின்றோம். இவ்வார்த்தைகளின் வெளிப்பாடு எமது செயல்களாகும். இறைவனின் செயற்பாடுகளை இவ்வார்த்தைகளிலேயே நாம் காணலாம். குறிப்பாக, படைப்பின் செயல் (ஆதியாகமம் அல்லது தொடக்கநூல் 1:25-28), விடுதலைச் செயல் (யாத்திராகமம் அல்லது விடுதலைப் பயணம் 3:17), ஆசீர்வதிக்கும் பண்பு (ஆதியாகமம் அல்லது தொடக்கநூல் 12:1-3), மீட்கும் செயல் (ஆமோஸ் 9:7) போன்றவற்றை உதாரணமாகக் கூறலாம்.

•            நற்செய்தி வாசகமாகிய மத்தேயு 13:1-9ல் விதைக்கிறவன் உவமையில் ஆண்டவராகிய இயேசு சரியான இடத்தில் விழுந்த விதையே பலனளிப்பதாகக் கூறுகின்றார். எனவே, இதையே நாம் ஒவ்வொருவரும் விதைக்க அழைக்கப்படுகின்றோம். விதை பலனளிக்கவில்லை எனச் சோர்ந்து போகாமல் எமது முயற்சியை நாம் முன்னெடுக்க வேண்டும். அதுவே, இறையாட்சிக்குரிய செயற்பாடாகும்.

•            இரண்டாம் உடன்படிக்கை வாசகத்தில் 1 தீமோத்தேயு 6:11-16ல் பவுல் தீமோத்தேயுவுக்கு ஆலோசனை சொல்லும்போது ஒரு சீடரிடம் காணப்பட வேண்டிய நற்பண்புகள் பற்றியே பேசுகின்றார். இங்கு உண்மையான ஒரு சீடன் தன்னை பண ஆசைக்கும் ஏனைய தீங்கிற்குமிருந்து விலக்கிக் காக்க வேண்டும் என்கிறார். அதனைப் போன்றே இறையியற் கல்வியும் எம்மை உண்மையுள்ள சீடர்களாக உருவாக்குவதற்கு உதவ வேண்டும்.

இயேசு இயக்கம் இணைய தொலைக்காட்சியை நீங்களும் பின்பற்றி பிறருக்கும் அறிமுகப்படுத்துங்கள்

இயேசு இயக்கத்தைப்

படித்ததற்கு நன்றி….