3 ஜூலை 2023

யோவான் 20:24-29

• கிறிஸ்துவுக்காக சான்று பகரும் மார்க்கங்கள் இரண்டு வகைப்படும். வாழும்போது அவருக்கு சான்று பகர்வோர் ஒரு சிலர் உள்ளனர். ஏனையோர் தமது மரணத்தின் ஊடாக கிறிஸ்துவுக்கு சான்று பகர்கின்றனர். அவ்வாறு வாழும்போதும் சான்று பகிர்ந்து, மரணத்தினூடாகவும் சான்று பகர்ந்த தோமாவைப் பற்றி இன்று நாம் சிந்திக்கின்றோம். அவரது வாழ்விற்கும் பணிக்கும் கடவுளுக்கு நன்றி செலுத்துகின்றோம்.

• லூக்கா 10:1-12 வரையுள்ள பகுதியில், ஆண்டவர் இயேசு எழுபத்திரெண்டு சீடர்களை அனுப்பும் வேளையில், சமாதானத்தின் நற்செய்தியை நீங்கள் ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொள்ளுங்கள் என அழைக்கின்றார். ஏசாயா 52:7-10 வரையுள்ள பகுதியில், இச் சமாதானத்தின் செய்தியை அறிவிக்கும் பாதங்கள் எவ்வளவு மேலானது என பொழியப்பட்டுள்ளது. அதேபோன்று, தோமாவும் சமாதானத்தின் நற்செய்தியை இந்தியாவிற்கும் பின்னர் இலங்கைக்கும் எடுத்து வந்ததை நாம் மறக்க முடியாது.

• திருப்பாடல் – சங்கீதம் 29ல், புயல்களின் மத்தியிலும் இறைவனின் பிரசன்னம் இருக்கின்றது என்பதை நாம் உணர்கிறோம். தோமாவின் திருப்பணியிலும் அநேக புயல் போன்ற அனுபவங்கள் பிற சமயத்தவரிடமிருந்தும் ஏனையவர்களிடமிருந்தும் அவருக்கு ஏற்பட்டாலும் இறை பிரசன்னத்தை ஒவ்வொரு அனுபவத்தின் மத்தியிலும் தோமையர் உணர்ந்ததை நாம் பார்க்கின்றோம்.

• 2 தீமோத்தேயு 3:16-18 வரையுள்ள பகுதியில், வேதவாக்கியங்கள் அனைத்தும் தேவ ஆவியினால் அருளப்பட்டு எழுதப்பட்டது எனவும், தேவனுடைய மனிதன் தேறினவனாகவும் அவ்வாக்குகள் போதிப்பதற்கும் கற்பிப்பதற்கும் நீதி வழியில் எம்மை நடத்துவதற்கும் ஏற்றவைகளாக காணப்படுகின்றன என பவுல் தீமோத்தேயுவுக்கு ஆலோசனை கூறுகின்றார். எனவே, தோமாவினுடைய வாழ்விலும் இந்த வாக்குகள் அவர் பிறருக்கு போதிப்பதற்கும் பிறருக்கு கற்பிப்பதற்கும் அவர் பிறரை நீதி வழியில் நடத்துவதற்கும் வார்த்தைகள் ஒரு வழிகாட்டியாக காணப்பட்டது.

• யோவான் நற்செய்தி 20:24ம் வாக்கியத்திலிருந்து பார்க்கும்போது, தோமாவைப் பற்றி யோவான் நற்செய்தியாளன் மாத்திரமே ஒரு சில குறிப்புக்களை தருகின்றார். அவர் இயேசுவின் பிரியாவிடை போதனையின்போது, அவர் போகிற இடத்தை அறியோமே வழியையும் அறியோமே என கூறி நிற்கின்றார் (யோவான் 14:1-6)

• யோவான் 11ம், 12ம் அதிகாரங்களில், லாசரு மரித்த செய்தி இயேசுவுக்கு அறிவிக்கப்பட்டபோது, இயேசு பெத்தானியாவுக்கு செல்ல முற்பட்டவேளையில் நாமும் செல்வோம். அவரோடு இறப்போம் என்ற செய்தியை அறிவித்தவர் இவரே ஆவார். மேலும், இயேசுவின் உயிர்த்தெழுதலின் பின்னர் சீடர்களோடு தோமா இருந்த வேளையிலும் தோமா இல்லாத வேளையிலும் இயேசு அவருக்கு காட்சி அளிக்கின்றார். இக்காட்சியின் நிறைவில், தோமா இயேசுவை நோக்கி, “என் ஆண்டவரே, என் தேவனே” என அறிக்கையிடுகின்றார். இவ்வறிக்கை உரோம அரசியலுக்கு எதிரான ஓர் அறிக்கையாகும். ஏனெனில், உரோமச் சூழலில் அவர்கள் அரசனையே ஆண்டவர் என அறிக்கையிட்டனர். இத்தகைய அறிக்கையையே ஆதித்திருச்சபை மக்களும் உரோம அரசனாகிய செசாருக்கு எதிராக கிறிஸ்துவே எங்கள் ஆண்டவர் என அறிக்கையிட்டு தங்களுடைய உயிரை நற்செய்திக்காக தியாகம் செய்தனர்.

• தோமா இயேசுவை அறிந்து, அனுபவித்து, அறிக்கையிட்டதுபோல நாமும் அறிந்து, அனுபவித்து, அறிக்கையிடுவோமாக.

ஆக்கம் : அருட்பணி அருளம்பலம் ஸ்டீபன்