touch, hands, universe-5831241.jpg

திருமறைப் பாடங்கள்: 2 இராஜாக்கள் 05 : 01 – 10, சங்கீதம் 10 : 01 – 12, எபிரேயர் 13 : 08 – 17, மத்தேயு 08 : 01 – 04, ரோமர் 15 : 07 – 13

சுருக்க ஜெபம்

சமத்துவ கடவுளே உமது சாயலில் எங்களை உருவாக்கியதற்கு நன்றி எங்களுடைய சொந்த வாழ்க்கைச் சூழ்நிலையில் சாதி, வர்கம், நிற வேறுபாடுகளை உருவாக்கி உங்கள் உருவத்தை சிதைத்து விட்டோம். தீண்டத்தகாதவர்கள்என்று அழைக்கப்பட்டவர்களைதொட்டு. அங்கீகரிக்கப்படாதவர்களை அடையாளம் கண்டு. பேசாதவர்களுடன்பேசி. விடுதலையின் அனுபவத்தை தந்து தடைகளைத் தகர்த்த உமது குமாரனாகிய இயேசு கிறிஸ்துவுக்காக உம்மைப் போற்றுகிறோம். உமது சிந்தையை எங்களுக்குத் தாரும், உடைக்கப்பட்ட மக்களின் மனித மாண்புக்காக நாங்கள் உழைக்க எங்களுடன் இருந்து வழிநடத்த வேண்டுமாய் மீட்பர் கிறிஸ்து இயேசுவின் மூலம் வேண்டுகிறோம் எங்கள் அன்பு நிறைந்த கடவுளே. ஆமென்.

முன்னுரை

கிறிஸ்து இயேசுவுக்குள் உயிரின் உயிரான இறைமக்களே உங்களை அன்புடன் வாழ்த்துகிறேன்.

“Untouchable” என்ற சொல்லாடலை சொல்லாய்வு செய்துவிட்டு திருமறையின் வெளிச்சத்தில் தீண்டாமைக்கான தீர்வை நோக்கி நகர்வோம். Untouchablility என்கிற ஆங்கிலச் சொல்லுக்கு தீண்டாமை என்று பொருள். Untouchable. என்ற ஆங்கிலச் சொல்லுக்கு தீண்டத்தகாதோர் என்று ஒரு கருத்தாக்கம் கற்பிக்கப்பட்டுள்ளது. இவை உண்மையிலேயே எங்கிருந்து தொடங்குகிறது என்றால் தீட்டு என்கிற கோட்பாட்டில் இருந்து தொடங்குகிறது, தீட்டு எங்கு உயிர்வாழ்கிறது என்றால் அது புனிதம் என்கிற கோட்பாட்டில் இருந்து. எனவே தீட்டும் – புனிதமும் வெறும் சொற்கள் இல்லை. இந்த இரண்டு சொற்களை கொண்டுதான் இந்தியாவினுடைய சமூக, அரசியல், வரலாறு எழுதப்படுகிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

பொதுவாக புனிதம் என்பது மதத்தோடும் கடவுளோடும் தொடர்பு உடைய சொல்லாக பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக, கிறிஸ்தவர்கள் திருமறையை (The Holy Bible) என்றும் இஸ்லாமியர்கள் த ஹோலி குர்ரான் புனித நூல் என்றும் சொல்வதுண்டு

இந்த புனிதமும் தீட்டும் எதில் உயிர் வாழ்கிறது என்றால் சாதியத்தில். ஆக புனிதத்தையும், தீட்டையும், சாதியத்தையும் மட்டுமே வைத்து ஒரு சமயம் உயிர்வாழ்கிறது அது பிறப்பால் மனிதன் உயர்வு தாழ்வு உடையவன் என்கிற கோட்பாட்டை மையமாக வைத்து மானுடத்தை பிளவுபடுத்தி வாழ்கிறது.

புனிதம் என்பது வேறு நாடுகளிலும் இருக்கிறது ஆகையினால் தான் அந்த (Holy) என்கிற சொல்லும், சேக்ரட் (Sacred) என்கிற சொல்லும் இருக்கிறது (It is Sacred water) என்று சொல்லுகிறார்கள். ஆனால் தீட்டு என்பதற்கு ஆங்கிலத்தில் என்ன சொல்லப்படுகிறது என்று தேடிப்பார்த்தேன் இது இந்தியச் சமூகத்தில் மூன்று நிலைகளில் இயங்குகிறது.

1. Untouchability தீண்டத்தகாதோர் 2. Unseeability பார்க்கக்கூடாதோர், 3. Unapproachability நெருங்கக் கூடாதோர். அதாவது தீண்டாமை, பாராமை, நெருங்காமை, இன்னும் விளக்கமாக சொல்ல வேண்டும் என்றால் ஒரு கூட்ட மக்களை தொட்டால் தீட்டு, இன்னும் சிலரை பார்த்தாலே தீட்டு மற்ற சிலர் அருகில் வந்தாலே தீட்டு, என்று தீட்டு கோட்பாடு இயங்கிவருகிறது.

இந்த தீட்டு கோட்பாடு சமூகத்தில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை அறிய “தீட்டு” என்ற சொல்லாடலை சொல்லாய்வு செய்ய வேண்டும், தீட்டுக்கான நேர் ஆங்கில சொல் கிடைக்கவில்லை சில ஆங்கில பேராசிரிய நண்பர்களிடம் இதைப் பற்றி விவாதித்தேன். புரஃபேன் (profane) என்ற சொல் சரியாக வருமா எனக் கேட்டேன். அவர் Taboo என்கிற சொல்லை குறிப்பிட்டார். Taboo என்பதற்கு Oxford – அகராதியில் Vehiment prevention of some action based on some belief என்று சொல்கிறது. அதாவது மத நம்பிக்கைகளின் அடிப்படையில் மிகக்கடுமையாக ஒருவரை, ஒரு செயலைச் செய்ய விடாமல் தடுப்பதற்கு Taboo என்று பொருள். கோவிலுக்குள் வரக்கூடாது என்பது Taboo. ஆனாலும் தீட்டு என்பதற்கு நேர்ப் பொருத்தமான, துல்லியமான மிகச் சரியான ஒரு சொல்லை சொல்ல முடியவில்லை. ஏனெனில் ஆங்கிலத்தை பயன்படுத்தும் நாடுகளில் தீட்டு இல்லை. ஆனால் இந்திய தேசத்தில் மட்டும் உழைக்காமல் பொங்கலும், பருப்பும், நெய்யும் சாப்பிடுவதற்கென்றே கண்டு பிடிக்கப்பட்ட ஆகச் சிறந்த ஆதிக்க சமூக கண்டுபிடிப்பு “தீட்டு”

தீட்டு எப்போது வேலை செய்யும் என்றால்? நமக்கான வாய்ப்பையும், நமக்கான உரிமையையும், அதிகாரத்தையும் கேட்கும் போது தான் “தீட்டு” தீவிரமாக வேலை செய்யும். தீட்டு கண்டுபிடிப்பு அறிஞர்கள் ஊடகத்தில் தோன்றி இப்போதெல்லாம் எங்கே சாதி இருக்கிறது தீட்டு எங்கு இருக்கிறது என்றெல்லாம் மேம்போக்காக பேசுவதுண்டு TET, NET, NEET, THETTU இவையெல்லாம் நவீன தீட்டுக் கோட்பாட்டின் உருமாறிய வடிவங்கள் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். ஆக Taboo சொல்லாடலின்படி சமய நம்பிக்கையின் அடிப்படையில் ஒரு செயலை செய்ய விடாமல், வேலை வாய்ப்புகளை பெறவிடாமல், உரிமைகளை பெற விடாமல், அதிகாரத்தை நுகரவிடாமல் தடுப்பதற்கான ஆதிக்க சக்திகளின் யுக்தியே தீட்டு. இந்த பார்வையில், இந்தப் புரிதலில் இந்தச் சூழலில் இருந்து கொண்டு திருமறையின் வெளிச்சத்தில் தீண்டத்தகாதோரை தொடுதல் என்கிற கருப்பொருளை, பேசுபொருளை அணுகுவோம்.

  1. 2 இராஜாக்கள் 5:1-10

சிரியா அரசனின் படைத்தலைவன் நாமான், தமஸ்கு நாட்டைச் சார்ந்தவர் படைத்தலைவனாக வலிமைமிக்க வீரனாக சிரியாவின் வெற்றிக்கு காரணமானவராக கருதப்பட்டதால் இவருக்கு அரசனிடம் சிறப்பும், நன்மதிப்பும், செல்வாக்கும் பெற்றிருந்தார். ஆனால் தொழுநோயாளர், சிரியா நாட்டினர் ஒருமுறை கொள்ளையடிக்கச் சென்றபோது, இஸ்ரயேலைச் சார்ந்த ஒரு சிறுமியை கடத்திக் கொண்டு வந்திருந்தனர். அவள் நாமானின் மனைவிக்கு பணிவிடை புரிந்து வந்தாள். நமானின் மனைவியிடம் அச்சிறுமி தலைவன் சமாரியாவில் உள்ள இறைவாக்கினரிடம் சென்றால் குணமாக்குவார் என்றாள். நாமானும் இஸ்ரேயல் அரசனுக்கு சிரியா அரசனிடம் பரிந்துரைக் கடிதம் பெற்று ஏறத்தாழ நானூறு கிலோ வெள்ளி, ஆறாயிரம் பொற்காசுகள், பத்து பட்டாடைகள் என பரிவாரங்களுடனும், குதிரைகளுடனும், தேருடனும் இஸ்ரேயல் மன்னனைச் சந்தித்தார் பிறகு எலிசாவைச் சந்தித்தார் இப்போது நாமானுக்கும் எலிசாவிற்கும் இடையே நடக்கிற உரையாடல் தான் பேசுபொருள். எலிசா நீ போய் யோர்தானில் ஏழுமுறை முழ்கினால், உடல் நலம் பெறும்” என்று ஆளனுப்பிச் சொல்லச் சொன்னார். எனவே நாமான் சினமுற்று வெளியேறினார். எலிசா என்னிடம் வந்து அருகில் நின்று தம் கடவுளாகிய ஆண்டவரின் பெயரைக் கூவியழைத்து தொழுநோய் கண்ட இடத்தில் தம் கையை அசைத்துக் குணப்படுத்துவார் என்று எண்ணியதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

நாமான் சாரட் என்ற குதிரைத் தேரில் இருந்து இறங்கி எலிசாவை சந்தித்ததாக பதிவுகள் இல்லை. இவரை எலிசா வந்து சந்திக்கவில்லை, வரவேற்கவில்லை என எண்ணுகிறார். ஆக ஆதிக்க மனப்பான்மையும், அதிகாரச் சிந்தையும், செருக்கும் நாமானுக்கு இருப்பதையே இந்த செயல்பாடு வெளிக்காட்டுகிறது.

மேலும் அபர்னா, பர்பார் என்ற தமஸ்கு நதிகள் இஸ்ரேயலில் உள்ள ஆறுகள் அனைத்தையும் விட “மேலானவை” அங்கு மூழ்கி நான் குணமாக முடியாதா? என்று சிந்திக்கிறார்.

இந்த சிந்தை இந்தியச் சூழலில் பொருத்திப் பார்க்கும் போது நாமானின் மேலாதிக்கப்பார்வை இங்கு வெளிப்படுகிறது. ஆறுகளில் கங்கை புனிதம் என்றால் காவேரி தீட்டா? விலங்குகளில் பசு புனிதம் என்றால் பிற விலங்குகள் தீட்டா? மொழிகளில் சமஸ்கிருதம் புனிதம் என்றால் தமிழ் நீசபாஷையா? தீட்டு மொழியா? இது தான் இந்தியாவின் எதார்த்த சூழல்.

இன்னும் விளக்கமாக சொல்ல வேண்டும் என்றால் பொது துறைப்பாடுகளில், ஆறுகளில், குளங்களில் ஒடுக்கப்பட்ட மக்கள் தண்ணீர் எடுக்க, குளிக்க அனுமதி மறுப்பு உள்ளது. ஒடுக்கப்பட்ட மக்களின் குடியிருப்புகளில் உள்ள கிணறு குளங்களில் ஆதிக்க சமூகத்தினர் புழங்குவதில்லை இந்தப் பார்வையில் “யோர்தான்” நதியை அணுக வேண்டும். “தீண்டத்தகாதவரை தொடுதல்” என்ற கருப்பொருளுக்கு நீதி சேர்க்க வேண்டுமானால் எலிசா தொழுநோயுடன் வந்த நாமானை தொடவில்லையே என்று சிந்திப்பதை விட நாமானின் செருக்கை, ஆதிக்க பார்வையை எலிசாவின் கண் கொண்டு பார்க்க வேண்டும். சிரியா படைத்தலைவன் நாமானின் பார்வையில் எந்த யோர்தான் இழிவாக தீட்டாக கருதப்பட்டதோ அதில் உன் ஆணவத்தையும், அதிகாரத்தையும் ஆதிக்கத்தையும், இறக்கி வைத்துவிட்டு யோர்தானில் ஏழுமுறை மூழ்கு என்றார். அப்போது நலம் பெறுவாய் என்றார் அவரும் மூழ்கினார் நலம்பெற்றனர் இன்றும் இந்தியச் சூழலில் இப்படிப்பட்ட மேலாதிக்கச் சாதிய தீட்டுத் துய்மை கோட்பாட்டை கட்டமைத்தவர்களும், உள்வாங்கிய LD 60T நோயாளிகளும் நலம்பெற வேண்டுமெனில்! கங்கையில் அல்ல உடைக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் குடியிருப்புகளில் உள்ள “யோர்தானில்” மூழ்கி எழ வேண்டும். இன்று இந்தியாவில் எலிசா இறைவாக்கினார் தோன்றினால் இந்த கருத்தியலைத் தான் முன்னெடுப்பார். எலிசா இனி ஒருபோதும் பிறக்கப் போவதில்லை நாமே எலிசாவாக ஒவ்வொரு நொடிப்பொழுதும் மறு பிறப்பெடுக்க வேண்டும்.

  1. எபிரேயர் 13:8-17

எபிரேயத் திருமுகம் எபிரேயத்தை தாய்மொழியாகக் கொண்ட யூத சமயத்தில் பிறந்து கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட யூதர்களுக்கு எழுதப்பட்டது இவர்கள் யூத பழக்கவழக்கங்கள், வழிபாட்டு முறைகளை விட்டொழித்துவிட்டு கிறிஸ்தவ மதத்தை தழுவினர். எனவே யூத சமயத்தைவிட்டு கிறிஸ்தவத்தை தழுவிய யூத மக்களின் மீது யூத சமய காவலர்கள் தாக்குதலை மேற்கொண்டு “கர்வாப்சி” என்று இந்தியாவில் சொல்வதைப்போல தாய் மதத்திற்கு திரும்பச் சொல்லி வற்புறுத்தினர். இது ஒருபுறமிருக்க மறுபக்கத்திலே கிறிஸ்தவத்தை தழுவிய யூத மக்களிடையே தோன்றிய சலிப்பு, நிறைவற்ற நிலை ஏற்பட்டது. காரணம் மிகப்பெரிய தாக்குதலை, உடைமைகள் சூரையாடப்பட்டதை எதிர்கொள்ள வேண்டியிருந்தது, எருசலேம் பெரிய கோவில், கணக்கற்ற வழிபாட்டுப் பழக்கவழக்கங்கள் ஜெப முறைகள் பலவகை திருவிழாக்கள், கொண்டாட்டம் முதலியவற்றை இழந்துவிட்ட நிலையில் தனியார் இல்லங்களில் சிறு குழுக்களில் வழிபாடுகள் நடத்தி வந்தனர் எனவே சலிப்பும், வெறுப்பும், அச்சமும் ஏற்பட்டதால் தாய்மதம் திரும்ப முற்பட்ட யூத கிறிஸ்தவர்களை மனதில் வைத்து எழுதப்பட்டதே எபிரேயர் திருமுகமாகும். இந்தப் பின்னனிய புரிதலில் இருந்து இந்தப் பகுதியை அணுக வேண்டும்.

இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர் எனவே யூத சமயத்தவரின் நூதன போதனைகளால் கவரப்படாதீர்கள் இறையரசு என்பது நாம் உண்பதையும் குடிப்பதையும் அடிப்படையாகக் கொண்டதல்ல, திருவிழாக் கொண்டாடுவது, ஓய்வுநாள் அனுசரித்தல், பலி செலுத்துதல் இவைகளில் இறையாட்சி இல்லை.

உணவு முறை பற்றிய ஒழுங்குகளால் யாதொரு பயனுமில்லை இதைப் பின்பற்றியவர்களும் ஒன்றும் பயன்பெறவில்லை என்பதுதான் உண்மை. எனவே அருள் வாழ்வு என்பது, நிறைவாழ்வு என்பது அன்பு, அமைதி, நீதி இவைகளை உள்ளடக்கியது என்கிறார் பவுல்.

இதை இன்றைய இந்தியச் சூழலில் பொருத்திப்பார்க்கும் போது (Food Politics) உணவு அரசியல் மிக முக்கிய பேசு பொருளாக உள்ளது. சைவம், அசைவம் என இருவகை உணவுமுறை அவற்றில் சைவம் உண்பவர் உயர்ந்தவர்கள் என்கிற கருத்தியல் உருவாக்கப்பட்டுள்ளது. அசைவம் உண்பவர்களை மட்டமாக பார்க்கும் நிலை அதுவும் மாட்டுக்கறி உண்பவர்களை தீட்டானவர்களாக சித்தரிக்கிற நிலை, இதை வைத்து கோமாதா அரசியல் (Cow Politics) மிகப்பெரிய அளவில் மாட்டிறைச்சி உண்பவர்கள் மீது வன்மத்தை கட்டவிழ்த்து விடுகிறநிலை, ஒருவரின் வீட்டில் உள்ள குழம்பு சட்டியில் கை போட்டு அவன் என்ன சமைக்கிறான் எனப் பார்த்து மாட்டிறைச்சி சமைத்தவரை இழுத்து ரோட்டில் போட்டு ஆடைகளை களைந்து அடிக்கிற அவல நிலை இந்த இந்திய தேசத்தில் தான் நடக்கிறது. ஆக இறையரசில் சேர உணவு முறை ஒரு பொருட்டல்ல என்பது பவுலின் வரிகளில் தெளிவாகிறது.

கிறிஸ்தவ சமயத்தில் பலிபீடம் இல்லை எனவே “பீடமற்றவர்கள்” என்கிற விமர்சனம் முன்வைக்கப்பட்டிருக்க வேண்டும் எனவே இதற்கு பதில் கொடுக்கும் பானியில் பவுல் கூறுகிறார். பழையேற்பாடு காலத்தில் பலிபீடம் இருந்தது அதில் பலியிடப்படும் விலங்குகளின் இரத்தத்தை பாவம் போக்க குரு தூயகத்திற்கு எடுத்துச் சென்றிருக்கலாம். ஆனால் அந்த விலங்கின் உடல் பாளையத்திற்கு வெளியே சுட்டெரிக்கப்படுகின்றன. இயேசுவும் தம் சொந்த இரத்தத்தால் மக்களை தூயவராக்க பாளையத்துக்கு புறம்பே, நகரவாயிலுக்கு வெளியே துன்புற்றார். எனவே நாமும் அவருக்கு ஏற்பட்ட இகழ்ச்சியில் பங்குபெற பாளையத்தைவிட்டு வெளியேறி அவரிடம் செல்வோம்.

இதை இந்தியச் சூழலில் பொந்திருப்பார்க்கும் போது ஒற்றை இந்தியா, ஒரே ரேசன்கார்டு, ஒரே மொழி, ஒரே மதம்… என்று முழங்குகிறார்கள். ஆனால் தேசத்தில் இரட்டை குடியிருப்புகள், இரட்டைச் சுடுகாடு, இரட்டை தண்ணீர் எடுக்கும் இடம் என எல்லாமே இரண்டு, இரண்டாக உள்ளது. ஆதிக்க சமூகம் வாழுகிற ஊர்தெரு வேறு, உடைக்கப்பட்ட மக்கள் வாழ நிற்பந்திக்கப் பட்டிருக்கிற, பாளையத்திற்கு புறம்பே உள்ள சேரி வேறு இது பெரும்பாலும் ஊர் தெருவிற்கு கிழக்கு பக்கத்தில் தான் கட்டமைக்கப்பட்டிருக்கும். காரணம் ஒருவேளை ஊர் தெருவுக்கு மேற்கு பக்கத்தில் சேரி குடியிருப்பு இருந்தால் மேற்கில் இருந்து வருகிற வாடைகாற்று சேரிக்குள் புகுந்து நாராச நெடி வீசுமாம், உழைக்கும் மக்களின் வியர்வை ஆதிக்க சமூகத்திற்கு நெடியாகத்தான் தெரியும். இறைவன் பலிபீடத்தில் இல்லை, கோவில் கருவரையில் இல்லை அவர் ஊர் தெருவுக்கு வெளியே, பாளையத்திற்கு புறம்பே, நகரவாயிலுக்கு வெளியே உடைக்கப்பட்ட மக்களின் நடுவே, உழைக்கும் மக்களின் நடுவே, துன்புறுகிற மக்களின் சார்பாளராக அவரும் துன்புறுகிறார். எனவே நாமும் தீட்டு தூய்மை கோட்பாட்டு நோயில் இருந்து இயேசுவின் இரத்தத்தால் தூய்மையாக்கப்பட ஊர் தெருவைவிட்டு வெளியேறி, பாளையத்தைவிட்டு வெளியேறி நகரவாயிலுக்கு வெளியே உள்ள உடைக்கப்பட்ட மக்களின் குடியிருப்புகளில் உள்ள இயேசுவை காணச் செல்வோம்.

ஆக இறையரசு என்பது உணவு அரசியலில் இல்லை, உடை அரசியலில் இல்லை, குடியிருப்பு அரசியலில் இல்லை. பலிபீட சமய அரசியலில் இல்லை, தீட்டுத் தூய்மை கோட்பாட்டு அரசியலில் இல்லை அது அன்பு, அமைதி, நீதி பகிர்வு இவைகளை உள்ளடக்கியது என்பதை பவுலின் போதனைகளில் இருந்து புரிந்து கொள்வோம்.

  1. மத்தேயு 8:1-4

லேவியராகமம் 13:45 ன்படி தொழுநோயால் பாதிக்கப்பட்டவர் கிழிந்த உடை அணிந்து, தலை வாராமல் மேலுதட்டை மறைத்துக் கொண்டு, தீட்டு, தீட்டு’, என குரலெழுப்பவேண்டும், நோயுள்ள நாளெல்லாம் அவர் தீட்டுள்ளவர், எனவே, தீட்டுள்ள அவர் பாளையத்துக்கு வெளியே தனியாக குடியிருக்கும்படி நிற்பந்திக்கப்பட்டிருந்தனர். இங்கு அப்படிப்பட்ட மனிதரை மலையிலிருந்து மக்கள் கூட்டத்துடன் வரும் இயேசு சந்திக்கின்றார். அப்பொழுது தொழுநோயாளர் அவரைப் பணிந்து, ஐயா, நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும் என்றார் இயேசு தமது கையை நீட்டி அவரைத் தொட்டு “நான் விரும்புகிறேன் உமது நோய் நீங்குக” என்றார் கிரேக்க மூலத்தில் (hepsato) தொடுதல் என்ற சொல்லுக்கு “அனைத்துக் கொள்ளுதல்” என்று பொருள். தொழுநோய் கண்டவர் பாளையத்துக்குப் புறம்பே மறைவான இடங்களில் வாழவேண்டும் என்ற சட்டம், ஒருவேளை இயேசு தொட வரும் போது அவர் தீட்டு, தீட்டு என குரல் எழுப்பி விலகி ஓடி இருக்கவேண்டும். எனவே இயேசு இங்கு ஒரு சட்ட மீறுதலை மேற்கொள்கிறார் “சட்டம் மனிதனுக்கு வாழ்வளிக்க வேண்டும் ஒருபோதும் மனித வாழ்வை அழித்தொழிக்கக் கூடாது” என்ற நோக்கில் அவர் விலகிச்செல்லாதபடி அரவணைத்து நலம் அளிக்கிறார். கூடியிருந்த வெகுதிரள் மக்களுக்கு (Practical Exposure) செய்முறை வகுப்பு எடுக்கிறார் இதுபோன்ற சமூக பிற்போக்கு தீட்டு தூய்மை கருத்தியல் கட்டமைப்புகளை உடைக்கிறார்.

தொழுநோய் கண்டவரை நலமடைய வைத்ததோடு மட்டுமல்லாமல் குருவிடம் காட்டி நோய் நீங்கியதற்காக மோசே கட்டளையிட்டுள்ள காணிக்கையை செலுத்தும் என்றார். இது மிகப் பெரிய சமூக மாற்றத்தை நோக்கி நகர்த்துவது, இதுவரை விலக்கப்பட்ட சமூகம் (Excluded Society) வரலாற்றில் முதல் முறையாக (Inclusive Society) உள்ளடங்கிய சமூக அமைப்பிற்குள் பங்கேற்க வைப்பதற்கான முயற்சியை மேற்கொள்கிறார். அதாவது இதுவரை ஆலய வழிபாட்டுத் தளங்களில் அனுமதிக்கப்படாதவர், சமூக நிகழ்வுகளில், திருவிழாக்களில் கொண்டாட்டங்களில், சமூக, பொருளாதார அரசியல், கலாச்சார பண்பாட்டுத் தளங்களில் புறக்கணிக்கப்பட்டவர்கள், மேற்கண்ட அமைப்புகளில் பங்கேற்க வைக்கவும், மனித மாண்போடு வாழவும், ஆளவும் செய்வதற்கான முன்னெடுப்புகளை இயேசு மேற்கொண்டார்.

நிறைவுரை

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இந்த தீட்டு – தூய்மை கோட்பாடு என்னும் பிற்போக்கு சமூக ஒழுங்கை (Retrospective Social Order) முற்போக்கு சமூக ஒழுங்காக (Progressive Social Order) மாற்றும் இந்த வேலைத் திட்டத்தை துணிச்சலாக செயல்படுத்த முனைந்தார்.

இறைவாக்கினர் எலிசாவும், ஆண்டவர் கிறிஸ்து இயேசுவும், அவரை பின்பற்றிய பவுலும் முற்போக்கு கருத்தியல் தளத்தில் ஒரே நேர்கோட்டுப் பாதையில் பயணித்திருக்கிறார்கள். இதே பாதையில் நாமும் பயணிப்போம். தீட்டு – தூய்மை கோட்பாட்டை புறந்தள்ளுகிற

“புதிய இறையரசைக் கட்டமைப்போம்”.

இந்த சிந்தை என்னிலும் உங்களிலும் இருப்பதற்கு இறைவன் துணைபுரிவராக.

தந்தை மகன் தூய ஆவியாரின் திருப்பெயராலே – ஆமென்

Rev. DJ. கிறிஸ்டோபர்

சி.எஸ்.ஐ. கிறிஸ்துநாதர் ஆலயம் – கோட்டை
திருச்சி