12 ஜுன் 2022
திரித்துவ ஞாயிறு: அன்பின் சமூகம்
மாற்கு 1:1-11

• பெந்தேகோஸ்தே ஞாயிறின் பின்னர் வருகின்ற முதலாவது ஞாயிறு திரித்துவ ஞாயிறாக காணப்படுகின்றது. இதுவே, திருச்சபை நாட்காட்டியில் அதிகளவு காலத்தை உள்ளடக்கியது ஆகும். மேலும், இக்காலத்தில் திருச்சபை வளர்ச்சியைக் குறித்து நாம் பெறுமளவிற்கு சிந்திக்கின்றோம்.

• பொதுவாக கடவுளை படைப்பாளராகிய கடவுள், மீட்பாளராகிய கடவுள், தூய்மைப்படுத்துகின்ற கடவுள் என மூன்று நிலைகளில் நாம் பார்க்கின்றோம். இதனையே, புதிய உடன்படிக்கை வாசகத்தில் 2 கொரிந்தியர் 13:5-14ல் நாம் காண்கின்றோம். இங்கு, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபை பிதாவாகிய கடவுளுடைய அன்பு பரிசுத்த ஆவியானவருடைய ஐக்கியம் போன்ற ஆசீர்வாத வார்த்தைகளால் பவுல் மக்களை ஆசீர்வதிக்கின்றார். இவ்வார்த்தைகளை பொதுவாக நாம் திருச்சபை வழிபாட்டில் பயன்படுத்துகின்றோம்.

• திருத்துவத்தில் பொதுவாக மூன்று என்ற இலக்கம் பயன்படுத்தப்படுகின்றது. யூதர்களை பொறுத்தவரையில் 7 மற்றும் 3 ஆகிய இலக்கங்கள் முக்கியமானவைகள். இங்கு முதலாம் உடன்படிக்கை வாசகத்தின்படி ஆதியாகமம் அல்லது தொடக்கநூல் 18:1-15 பகுதியில் 3 புருஷர்கள் ஆபிரகாமை சந்திக்க கூடாரத்துக்குள் வருகின்றார்கள். இங்கு விருந்தோம்பல் முக்கியத்துவப்படுத்தப்படுகின்றது.

• நற்செய்தி பகுதியில் மாற்கு 1:1-11ல் திரித்துவத்தின் தாக்கத்தை நாம் பார்க்கலாம். இதனை, இயேசுவின் திருமுழுக்கோடு ஒருசிலர் ஒப்பிடுவர். அதாவது, தந்தையின் பிரசன்னம், வார்த்தையாகிய இயேசுவின் வருகை, தூய ஆவியரின் வருகை போன்ற மூவருக்கு இடையிலான இணைப்பைக் குறித்து நாம் பார்க்கின்றோம். அதாவது, திரித்துவ கடவுளாகிய தந்தை, மைந்தன், தூய ஆவியருக்கு இடையில் ஏற்ற தாழ்வுகள் காணப்படுவதில்லை. அவர்களுக்கு இடையே சமத்துவ சிந்தனைகள் நிலவுகின்றன. மேலும், அவர்களுக்கிடையே போட்டித் தன்மைகளும் நிலவுவதில்லை. இது இன்றைய சமுதாயத்திற்கு ஏற்புடைய தன்மைகளாகும்.

உதாரணமாக, ஆணாதிக்கம் மிக்க சமுதாயத்தில் ஆண், பெண்ணுக்கிடையே நிலவ வேண்டிய சமத்துவத்திற்கு இது ஓர் சிறந்த மாதிரியாகும். மேலும், இன்றைய பல்சமய சூழலில் வேறுபாடுகளின் மத்தியில் திரித்துவ கடவுளுக்கிடையே எவ்வாறு ஒற்றுமை நிலவுகின்றதோ அதேபோன்ற ஒற்றுமை சமயங்களுக்கிடையே நிலவ திரித்துவ மாதிரி சிறந்ததாகும். மேலும், பொருளாதார ஏற்றத் தாழ்வினால் சமத்துவம் இன்றி தவிக்கும் மக்களுக்கும் சமத்துவத்தை ஏற்படுத்தும் திரித்துவ மாதிரி மிகவும் பொருத்தமானதாகும்.

ஓவியம்: கெல்லி லட்டிமோர், ஜூன் 12, 2017.