jesus, cross, church-8459082.jpg

Trinity Sunday 2024

தொடக்கநூல் 1:1-28

•            ‘திரித்துவம்’ என்னும் சொல் திருமறையில் காணப்படாத ஒரு சொல்லாகும். கடவுள் தன்னை காலத்துக்குக் காலம் பல்வேறு வழிகளில் வெளிப்படுத்தியதை திருமறை எடுத்துக் காண்பிக்கின்றது. சிறப்பாக, திரித்துவம் என்பது கி.பி.4ம்,5ம் நூற்றாண்டில் வரலாற்றில் ஏற்பட்ட ஓர் பிரச்சினைக்கான தீர்வாகும். இயேசு யார் என்பதை திருச்சபை உலகிற்கு எடுத்துக் காட்டுவதற்காகவும் விளங்கப்படுத்துவதற்காகவும் திரித்துவத்தை ஓர் ஊடகமாக பயன்படுத்தியது. எனினும், பிற்பட்ட காலப்பகுதியில் இத்திரித்துவம் திருச்சபைக்கு பிரச்சினையாக அமைவதை நாம் காணலாம்.

•            திருமறையில் கடவுளின் பன்மைத்தன்மையை நாம் காண்கிறோம். தொடக்கநூல் 1:28, தொடக்கநூல் 11:10, ஏசாயா 6:8 ஆகிய பகுதிகளில் ‘நமது’ என்ற பதம் பயன்படுத்தப்படுகின்றது. இங்கு ‘நமது’ என்பது கடவுளின் பன்மைத்தன்மையை எடுத்துக் காண்பிக்கின்றது. மேலும், புதிய ஏற்பாட்டில் மத்தேயு 28:19,20, 2 கொரிந்தியர் 13:13 ஆகிய பகுதிகளில் புலப்படும் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபை, பிதாவாகிய தேவனுடைய அன்பு, தூய ஆவியரின் அரவணைப்பு ஆகிய திரித்துவ நபர்களின் செயற்பாடு ஓர் பிற்செயற்கை என்பதை வரலாறு எங்களுக்கு கற்பிக்கின்றது.

•            கடவுள் ஓர் படைப்பாளராகவும் குமாரனாகிய இயேசு ஓர் மீட்பாளராகவும் தூய ஆவியானவர் தூய்மைப்படுத்துபவராகவும் திரித்துவத்தில் காண்பிக்கப்படுகின்றார். எனவே கடவுளின் படைப்பு பணியையும், கிறிஸ்துவின் மீட்புப் பணியையும், தூய ஆவியரின் தூய்மைப்படுத்தும் பணியையும் நாம் தொடர்ந்து ஆற்றுவதை திரித்துவ கடவுள் எம்மிடத்திலிருந்து எதிர்ப்பார்ப்பதாகும். மேலும், திரித்துவ கடவுளிடையே அதிகாரப்போட்டி காணப்படுவதில்லை. எனவே, இன்று நிலவும் ஆணாதிக்கவாதிகளுக்கு இதுவோர் எடுத்துக்காட்டாகும். மேலும், திரித்துவக் கடவுள் தமக்கிடையே பகிர்வை மேற்கொள்ளுகின்றனர். இது இன்று நிலவும் பொருளாதார நெருக்கடிக்கான ஓர் பதிலாகும். திரித்துவ கடவுள் வேறுபாடுகளின் மத்தியில் ஒற்றுமையை ஏற்படுத்துகின்றார். இது இன்றைய பல்சமய சூழலில் வேறுபாடுகளின் மத்தியில் ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கு சிறந்ததோர் பாடமாகும்.

•            இன்று நாம் வாழும் பல்சமய சூழலில் இந்து சமயத்தில் காணப்படும் ‘சத் சித் ஆனந்த’ என்ற பதம், பௌத்த சமயத்தில் காணப்படும் ‘புத்தம் சரணம் சங்கம்’ ஆகியவைகள் எமது நடைமுறைச் சூழலில் திரித்துவத்தைப் புரிந்து கொள்ள ஓரளவேணும் போதுமான ஊடகங்களாகக் காணப்படுகின்றது. அத்துடன், மேலும் இன்று பொதுவாகவே இந்த திரித்துவம் எமது நடைமுறை வாழ்வுடன் தொடர்புபடுத்துவதை புனித ஆகஸ்தீன் தன்னுடைய காலத்தில் விளங்கப்படுத்துகின்றார். திண்மமாகிய பனிக்கட்டி வெப்பமேற்றும்போது திரவமாகவும், திரவம் வெப்பமேற்றும்போது ஆவியாகவும் மாறுகின்றது. ஒரு பொருள் மூன்று நிலைகளை அடைகின்றது என்பதை உதாரணத்தினூடாக அவர் விளங்கப்படுத்துவதை நாம் காண்கின்றோம். யோவான் 1:1-18ல், திரித்துவக் கடவுளில் இரண்டாம் நபராகிய இயேசுகிறிஸ்து தந்தையோடே இருந்தவர் என்ற கருத்து வெளிப்படுத்தப்படுகிறது. ஆதியிலே வாக்கு இருந்தது. அந்த வாக்கு இறைவனுடன் இருந்ததாக யோவான் கூறுகின்றார். இங்கே கன்னிப்பிறப்பைப் பற்றி யோவான் எதுவும் தெரிவிக்காமல் மாறாக, வாக்கு இவ்வுலகிற்கு வருகைத்தந்து அது நம்மிடையே குடிகொண்டது என்பதை எடுத்துக் காண்பிக்கின்றார். அந்த வாக்கைக் குறித்து சாட்சி கொடுப்பதே எங்கள் பணி என்கிறார். எனவே, திரித்துவ கடவுளுக்கு எமது வாழ்வாலும் பணியாலும் சாட்சியளிப்பதே எம் ஒவ்வொருவருடைய கடமையுமாகும்.

ஆக்கம்: அற்புதம்