வசந்தகாலப் பூக்கள் 2


இரண்டாம் தியானம்

மனுக்குல வீழ்ச்சிக்கு அதிபெற்றோரான ஆதாம், ஏவாள் ஆகிய இருவரிடம் காணப்பட்ட சந்தேக உணர்வே இரண்டாவது காரணமாகும். சந்தேகம் காணப்படும் இடத்தில் சந்தோஷம் காணப்பட மாட்டாது. இன்று பல குடும்பங்கள் பிளவடைந்து காணப்படுவதற்கு அவர்களிடையே காணப்படும் சந்தேகம் முக்கியமானதாகும். மனிதர்களோடு மாத்திரமன்றி இன்று நாம் கடவுளிடமும் சந்தேகப்படுகின்றோம்.

பிசாசானவன் ஏவாளிடத்தில் வந்து தோட்டத்தின் நடுவில் இருக்கின்ற விருட்சத்தின் கனியை புசிக்க வேண்டாம் என இறையவர் உங்களுக்கு கட்டளை கொடுத்ததுண்டோ என கேள்வி எழுப்பியது. மேலும், நீங்கள் புசிக்கும் நாளில் உங்கள் கண்கள் திறக்கப்பட்டு நீங்கள் கடவுளைப் போலாகுவீர்கள் என்ற காரணத்தினாலேயே அக்கனியைப் புசிக்கக் கூடாதென இறையவர் கட்டளையிட்டார் என கடவுள் பேரில் சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதனைக் குறித்து ஏவாள் சற்றேனும் சிந்திக்கவில்லை. குறிப்பாக, கடவுள் எல்லா நன்மைகளையும் துறந்து மேலிருந்து இறங்கி இறந்தார் (பிலிப்பியர் 2:5-11). ஆனால், ஆதி பெற்றோர் இருவரும் கீழிருந்து மேலே செல்ல விரும்பினார். இத்தகைய ஆசையே இறையவர் மீது சந்தேகப்படுவதற்கு பிரதான காரணமாகும்.

தனது சந்தேகத்தில் இருந்து விடுபட விரும்பவில்லை. இவர்கள்  கடவுளின் சாயலில்தான் படைக்கப்பட்டுள்ளேன் என்பதை மறந்துபோனார்கள். மேலும்,  கடவுளின் சர்வ வல்லமையுள்ள தன்மை (தொடக்கநூல் அல்லது ஆதியாகமம் 1:25-27), ஆசி வழங்கும் தன்மை (தொடக்கநூல் அல்லது ஆதியாகமம் 12:1-3), பாதுகாக்கும் தன்மை (தொடக்கநூல் அல்லது ஆதியாகமம் 9:1-10), விடுதலை அளிக்கும் தன்மை (ஆமோஸ் 9:7) போன்ற பல பண்புகளில் சந்தேகப்பட்டார்கள். இறையவரில் சந்தேகப்படுதல் என்பது அவரின் குணவியல்புகளில் சந்தேகப்படுவதற்கு சமமாகும். இன்றும் நாம் எமது நாளாந்த வாழ்வில் எமக்கு துன்ப, துயர அனுபவங்கள் ஏற்படும்போது, நாம் கடவுளில் அல்லது அவரது குணவியல்புகளில் சந்தேகப்படுகின்றோம். உதாரணமாக, கடவுளுக்கு கண்ணிருக்கிறதா என புலம்பி கடவுளின் இருப்பு நிலையைக் குறித்து சந்தேகப்படுகின்றோம். இது எமது வீழ்ச்சிக்கான இன்னுமோர் காரணமாகும். எனவே, இந்நாட்களில் நாம் கடவுளில் விசுவாசம் கொண்டு அவரில் நிலைத்திருக்கின்றேனா இல்லையேல் சந்தேகப்படுகின்றேனா என ஆராய்ந்து பார்ப்போம். 

செபம்: இறைவா என் பலவீனங்களின் மத்தியில் நான் உம்மில் நிலைத்திருந்து உறுதியாய் வாழ உலக ஆசைகளிலிருந்து எம்மை விடுவித்தருளும். ஆமென்.