“இலங்கை தமிழருக்கு ஓர் அம்பேத்கர் கிடைத்திருந்தால்..?”

1800களில் இலங்கையின் மத்திய மாகாணத்தில் உள்ள கண்டியை சுற்றியுள்ள மலைகளில் தேயிலை, காஃபி, ரப்பர் ஆகிய பயிர்களை நட ஆங்கிலேயர்கள் முடிவெடுத்தனர். அதில் வேலை செய்வதற்காக தமிழகத்தில் இருந்து ஆயிரக்கணக்கானோரை கங்காணிகள் மூலம் அழைத்து சென்றனர். இவ்வாறு 1823ம் ஆண்டிலே மலையகத்தில், தமிழர்கள் முதன் முதலாக குடியேற்றப்பட்டதாக ஆவணங்கள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.


2023ம் ஆண்டுடன் இரு நூற்றாண்டுகளை கடந்துள்ள மலையகத் தமிழர்கள், தங்களின் 200 ஆண்டுகால வரலாற்றை அசைப்போட தொடங்கியுள்ளனர். “மலையகம் 200” என்ற பெயரில் இரு நூற்றாண்டு கால அரசியல், வரலாறு, இலக்கியம், சமூக பொருளாதார விவகாரங்கள் குறித்து விவாதிப்பதை காண முடிகிறது. மலையகத் தமிழர் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்திய ஆளுமைகள், அமைப்புகள் குறித்தும் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர்.


தமிழ் பிரதிநிதிகள் சந்திப்பு

இந்த சூழலில் இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கருக்கும் மலையகத் தமிழர்களுக்கும் இடையேயான தொடர்பை அறிந்துக்கொள்வது அவசியமாகிறது. 1950 ஆம் ஆண்டு மே மாதம் 25 ஆம் தேதி கண்டியில் உலக பவுத்த மாநாடு நடைபெற்றது. இதில் பங்கேற்குமாறு 27 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்தியாவில் அம்பேத்கருக்கு மாநாட்டில் பங்கேற்குமாறு அழைப்பு வந்திருந்தது. ஏனென்றால் அந்த காலக்கட்டத்தில் அவரின் பவுத்த மதமாற்றம் தொடர்பான செயற்பாடுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
கண்டி பவுத்த மாநாட்டுக்கு அம்பேத்கர் தன் மனைவி சவிதா, செட்யூல்ட் காஸ்ட் ஃபெடரேஷன் நிர்வாகி ராஜ்போஜ் உள்ளிட்டோருடன் விமானம் மூலம் மே 23ம் தேதி கொழும்புக்கு சென்றார். அங்கு அவருக்கு சிங்களர்கள், தமிழர்கள் இரு தரப்பிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மே 25ம் தேதி கண்டியில் உலக பவுத்த மாநாடு நடைபெற்ற தலதா மாளிகைக்கு சென்றார். முன்னதாக மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட சில தீர்மானங்களில் தனக்கு உடன்பாடு இல்லை எனக் கூறி அம்பேத்கர் மாநாட்டில் பேச மறுத்துவிட்டார்.
மஹா போதி சங்க பிக்குகளின் வேண்டுகோளுக்கு இணங்க, மாநாட்டுக்கு பிந்தைய கூட்டத்தில் மட்டும் அவர் உரையாற்றினார்.
இதைத்தொடர்ந்து கண்டியில் தங்கியிருந்த அம்பேத்கரை மலையகத் தமிழ் பிரதிநிதிகள் சந்தித்தனர். அவர்களுக்கு வட்டமேஜை மாநாடு, பூனா ஒப்பந்தம், தமிழக செட்யூல்ட் காஸ்ட் ஃபெடரேஷன் நிர்வாகிகள் மூலம் அம்பேத்கர் ஏற்கெனவே அறிமுகமாகி இருந்தார். அவர்கள் மூலம் கொழும்பு, மலையகப் பகுதிகளில் இயங்கிவந்த பண்டிதர் அயோத்திதாசரின் பவுத்த சங்க கிளைகளின் செயல்பாட்டை கேட்டறிந்தார். இவ்வாறு அம்பேத்கரை சந்தித்த தமிழ் பிரதிநிதிகள் யார்? அவர் எங்கெங்கு பயணித்தார் என்பதற்கான உறுதியான தகவல்கள் கிடைக்கவில்லை. அதேவேளையில் அம்பேத்கர் இலங்கையில் தமிழ் பிரதிதிகளை சந்தித்த புகைப்படங்கள் மட்டும் கிடைக்கின்றன. அதில் இடம்பெற்றுள்ள நபர்கள் யார் என்பதையும் உறுதிப்படுத்த முடியவில்லை.


ஜூன் 6-ம் தேதி கொழும்பு பவுத்த இளைஞர்கள் அமைப்பின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் அம்பேத்கர், “இந்தியாவில் பவுத்தத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும்” என்ற தலைப்பில் உரையாற்றினார். அதன் பிறகு உடல்நிலை பாதிப்பின் காரணமாக சுமார் 50 நாட்கள் கண்டியிலே தங்கி ஓய்வெடுத்தார். பேராதெனியா, ஹட்டன், நுவரெலியா உள்ளிட்ட இடங்களுக்கு சென்றதாக குறிப்புகள் கிடைக்கின்றன. கண்டியின் பசுமையான வனப்பும், புராதன அமைதியும் தனக்கு புத்துணர்ச்சி ஊட்டியதாக பின்னாளில் அம்பேத்கர் குறிப்பிடுகிறார்.


25 ஆயிரம் பேர் மதமாற்றம்
இலங்கையில் இருந்து திரும்பிய 6 ஆண்டுகளுக்கு பிறகு 1956 ஆம் ஆண்டு அம்பேத்கர் அதிகாரப்பூர்வமாக பௌத்தம் தழுவினார். அவர் பவுத்தம் தழுவிய செய்தி அறிந்த மலையகத் தோட்ட தொழிலாளர்கள், கொழும்பு தமிழ் இளைஞர்கள் ஆயிரக்கணக்கில் பவுத்த மதத்துக்கு மாறினர். யாழ்ப்பாணம், மட்டக்களப்பு போன்ற வடகிழக்கு பகுதிகளிலும் அம்பேத்கரின் தாக்கத்தின் காரணமாக நூற்றுக்கணக்கான இளைஞர்கள் பவுத்தம் தழுவியதாக வைரமுத்து மாஸ்டரின் குறிப்புகளில் இருந்து அறிய முடிகிறது.
1956ம் ஆண்டு அக்டோபர் 28ஆம் தேதி இலங்கை, பர்மா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் இளைஞர்கள் பௌத்தம் தழுவியதாக பத்திரிகையில் செய்தி வெளியாகியுள்ளது. இவர்களில் பெரும்பாலானவர்கள் சாக்கிய பௌத்த சங்க பின்னணியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அம்பேத்கரின் இலங்கை விஜயத்தை போற்றும் வகையில் அந்நாட்டு அரசு 2013ம் ஆண்டு கொழும்பு மஹா போதி சங்கத்தில் அம்பேத்கர் சிலையை திறந்து வைத்துள்ளது.


சிங்கள ஆய்வாளர் முன்வைக்கும் பார்வை
இலங்கையில் யுத்தம் முடிந்திருந்த 2010ம் ஆண்டு சிங்கள சமூகவியல் ஆய்வாளர் ஃபசில் ஃபெர்னாண்ட்டோ,
“இலங்கை தமிழருக்கு ஓர் அம்பேத்கர் கிடைத்திருந்தால்..?” என்ற கட்டுரை ஒன்றை எழுதி இருந்தார். அந்த கட்டுரையில், சாதி ஏற்றத்தாழ்வுகளும் ஒடுக்குமுறைகளும் நிறைந்த இந்திய சமூகத்தில் அம்பேத்கர் சட்ட ரீதியாக போராடி ஒடுக்கப்பட்டோருக்கு விடுதலை பெற்று கொடுத்திருக்கிறார். அவர் எந்த நிலையிலும் ஆயுத போராட்டத்தை முன்னெடுக்கவில்லை. அவரைப் போலவே ஒருவர், ஏற்றத்தாழ்வுகள் நிறைய இலங்கை தமிழ் சமூகத்தில் சட்ட ரீதியாக போராடி இருந்தால் ஆயுத போராட்டமே உருவாகி இருக்காது. யுத்தத்தினால் லட்சக்கணக்கானோர் பலியாகி இருக்கவும் மாட்டார்கள். பவுத்தம் தழுவிய அம்பேத்கர், இலங்கை தமிழ் சமூகத்தில் தோன்றி இருந்தால் சிங்களர் தமிழர் இடையே கூட, சகோதர உணர்வு மேலோங்கி இருந்திருக்கும் என வித்தியாசமான பார்வையை முன்வைத்து விவாதித்துள்ளார்.


இலங்கை தமிழர்கள் இந்தியாவில் இருந்து எத்தனையோ ஆளுமைகளை, இயக்கங்களை இறக்குமதி செய்துகொண்டிருக்கிறார்கள். அந்த இயக்கங்களின் வண்ணங்களில் தங்களை அடையாளப்படுத்திக் கொள்கின்றார்கள். ஃபசில் ஃபெர்னாண்டோ எழுதியதைப் போல, அம்பேத்கரை இறக்குமதி செய்திருந்தால் இன்று இலங்கை தமிழர் வாழ்வு எப்படி இருந்திருக்கும்? என்று யோசித்துப் பார்க்கவே நன்றாக இருக்கிறது.

ஓவியம்: சிட்திஷ் கவுதம்

இரா.வினோத்,
பத்திரிக்கையாளர், எழுத்தாளர்.
பெங்களூரு