வசந்தகாலப் பூக்கள் 12

பன்னிரெண்டாவது தியானம்

              மனித வாழ்வில் உண்மையான பொருட்களை போலிப் பொருட்களிலிருந்து அடையாளம் காண விரும்புகின்றோம். யாரும் போலிப் பொருட்களை பணம் கொடுத்து வாங்க விரும்பமாட்டார்கள். இதனைப் போன்றே உண்மையான உபவாசத்தின் அர்த்தத்தை நாம் போலி அர்த்தங்களிலிருந்து பிரித்தறிய வேண்டும். குறிப்பாக, இஸ்ரவேல் மக்கள் பாபிலோனிய அடிமைத்தனத்திலிருந்து விடுதலைப் பெற்ற பின்னர் தமது சொந்த நகராகிய எருசலேமுக்குள் வந்து குடியேறினர். இப்படியான சூழ்நிலையிலேயே ஏசாயா 58:5-9 வரையான பகுதியில் உண்மையான உபவாசத்தைப் பற்றி இறைவாக்கினர் பேசுகின்றார்.

              எமது உபவாசம் இறைவனுக்கும் எமக்குமுள்ள உறவை மாத்திரம் கவனம் செலுத்தாமல் எமக்கும் மற்றவர்களுக்குமிடையே உள்ள உறவையும் பலப்படுத்த வேண்டும். குறிப்பாக, ஒடுக்கப்படும் மக்களுக்கான விடுதலை, சிறைப்பட்டோருக்கான விடுதலை, உணவற்ற மக்களுக்கான உணவு பகிர்வு, ஆடையற்ற மக்களுக்கான ஆடை வழங்கல் போன்ற செயற்பாடுகள் உபவாச நாட்களில் முன்னெடுக்கப்படவேண்டும். உபவாசத்துடன் நற்செயல்களும் முன்னெடுக்கப்படவேண்டும். அவ்வாறு செய்யப்படும்போதே அது உண்மையான உபவாசமாக காணப்படுகின்றது. மாறாக, நாம் பிறரை ஒடுக்கி தேவையுள்ள மனிதருக்கு உதவி செய்யாதபட்சத்தில் எமது செயல்களின் அடித்தளத்திலேயே நியாயந்தீர்ப்பு நடைபெறும் (மத்தேயு 25:31-46). அத்துடன், எமது உபவாசமும் அர்த்தமற்றதாக மாறிவிடும்.

செபம்: இறைவா என் உபவாச ஆன்மீகம் சமூக நற்செயல்களால் பரிசோதிக்கப்பட்டு உண்மையான உபவாசத்தை இந்நாட்களில் கடைபிடிக்க அருள் புரிவாயாக.