magic, book, wisdom-8391941.jpg

Wisdom from above

லூக்கா 10:21-24

•            திருவிவிலியத்தில் ஞானாகமம் என்னும் நூல் காணப்படுகின்றது. இது ஞானத்தை வெளிப்படுத்துகின்ற ஒரு நூலாகும். குறிப்பாக, ஞானம் விண்ணிலிருந்து அருளப்படுவதாக நாம் திருமறையில் வாசிக்கின்றோம். கடவுளே இந்த ஞானமாக காட்டப்படுகிறார். யோவான் 1:1-3லே, ஆசிரியர் யூதர்களுக்கும் கிரேக்கர்களுக்கும் நற்செய்தியை அறிவிப்பதற்காக ‘லோகோஸ்’ என்னும் வார்த்தையைப் பயன்படுத்துகின்றார். இங்கே ‘லோகோஸ்’ என்பது ஞானத்தைக் குறிப்பதற்காக பயன்படுத்தப்படும் வார்த்தையாகும். இது கிரேக்கர்களுக்கு மிக பரீட்சையமான ஒரு சொல்லாகும்.

•            லூக்கா 10:21-24ல், இந்த ஞானம் எவ்வாறு வெளிப்படுகிறது என்பதைப் பற்றி இயேசு பேசுகின்றார். கடவுள் தன்னை காலத்திற்குக் காலம் பல்வேறு வழிகளில் வெளிப்படுத்தி வருகிறார். அவ்வெளிப்பாடு நேரடியாகவும் மறைமுகமாகவும் காணப்படுகிறது. அத்துடன் சிறியவர்களுக்கும், பெரியவர்களுக்கும், சமூகங்களுக்கும் கடவுளின் வெளிப்பாடு இடம்பெறுவதை நாம் காணலாம். இதனையே இப்பகுதி எமக்கு எடுத்துக் காண்பிக்கின்றது. குறிப்பாக, இந்ஞானம் அறிவாளிகளுக்கு மறைக்கப்பட்டு பாலகர்களுக்கு வெளிப்படுத்தப்படுகின்றது என்ற உண்மை காண்பிக்கப்படுகிறது. எனவே, இவ்வாறான வெளிப்பாடு லூக்கா நற்செய்தியில் காண்பிக்கப்படுவதோடு மாத்திரமல்ல மத்தேயுவிலும் காணப்படுகின்றது. சிறப்பாக மத்தேயு 2:1-12ல், இயேசுவின் வெளிப்பாடு சாஸ்திரிகளுக்கும் அல்லது ஞானிகளுக்கும் வெளிப்படுத்தப்படுகிறது என்பதை நாம் காணலாம்.

•            தந்தை மைந்தன் உறவு பால் உறவுக்கு அப்பாற்பட்டது. இது எல்லா நிலைகளையும் தாண்டியதொன்றாகும். சிறப்பாக, தந்தை மைந்தன் உறவைப் பற்றி யோவான் நற்செய்தியாளன் கையாளுகின்றார். அதாவது, இயேசு தந்தையோடு இருந்தவர் எனக் காண்பிக்கிறார். ஆதியிலே வாக்கு இருந்தது. அவ் வாக்கு இறைவனோடு இருந்தது (யோவான் 1:1-3). மேலும் தந்தை மைந்தன் உறவில் யோவான் 2:13-17ல், இவ்வாலயம் எல்லா மக்களுக்குமான செபவீடு என தந்தைக்கும் மைந்தனுக்கும் உள்ள உறவைக் காண்பிக்கிறார். யோவான் 5:36ல், தந்தையின் திருவுளச் சித்தப்படி செய்வதே எனது கடமை என்கின்றார். யோவான் 10:30லே, தந்தையிலும் பார்க்க மைந்தன் கீழானவர் என்கிற உறவு நிலையும் காணப்படுகின்றது. அத்துடன், இயேசு திருமுழுக்கின்போது தந்தையால் உரிமைப் பாராட்டப்படுகிறார். லூக்கா 3:10ம் வசனத்திலிருந்து நாம் இதனை அவதானிக்கலாம். இவர் என் பிரியமைந்தன் என்பது இவ்வாக்கின் ஊடாக வெளிப்படுத்தப்படுகிறது. எனவே இங்கு தந்தை மைந்தன் என்பது ஒரு அன்புறவாகவும், பணிவுறவாகவும் நாம் பார்க்க வேண்டும்.

•            இஸ்லாமிய சமயத்தைப் பொறுத்தவரையிலே கடவுளை பகுக்கப்படமாட்டார்கள். அதாவது, கடவுள் பகுக்கப்பட முடியாதவர். இதன்படி, கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையே உள்ள உறவுநிலை எப்பொழுதும் பால் சார்ந்த உறவு அல்ல மாறாக, பணி சார்ந்த உறவு என்பது வலியுறுத்தப்படுகின்றது. எனவே, அவரின் வெளிப்பாடு அனைத்துலகம் சார்ந்தது. அனைவருக்கும் சார்ந்தது. அந்ஞானம் நிலையானது. எம்மை வழிநடத்துகின்றது. எனவே, அந்த ஞானத்திற்காக காத்திருந்து அதனை நாம் பெற்றுக்கொண்டு மற்றவர்களை சரியான முறையில் வழிநடத்த நாம் வழிநடத்தப்பட தூய ஆவியரின் அருளை வேண்டி நிற்போமாக.  

ஆக்கம்: அற்புதம்