இயேசுவின் காலத்தில் யூதப் பெண்கள்


அன்றைய யூத சமுதாயத்தில் பாவிகள் வரிதண்டுவோர், பெண்கள் என பலரும் மனித மாண்பின்றி, ஒதுக்கப்பட்டு வாழ்ந்தனர். யூதப் பெண்களை இரண்டாம் தர குடிகளாகவும், சமாரியப் பெண்கள், சீரிய நாட்டுப் பெண்கள் புறந்தள்ளப்பட்ட, தீண்டாகாதவர்களாகவும் கருதப்பட்டார்கள். இயேசுவின் வாழ்வும் பணியும் அவருடைய காலக்கட்டத்தில் வாழ்ந்த மக்களுக்கே அதிர்ச்சியையும், ஆச்சர்யத்தையும் அளித்திருக்க கூடும். இயேசுவின் பிறப்பு முதல், இறப்பு வரை அவருடைய வாழ்வில் முக்கிய இடம் வகித்தவர்கள் ஆடு மாடு மேய்த்தவர்கள், பாவிகள், தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள், விபச்சாரத்தில் பிடிப்பட்ட பெண்கள் என கடை நிலையில் இருந்த மக்களைத் தேடி செல்வதன் மூலம் தம் வாழ்வால் மற்றவர்களுக்கு ஒரு சாட்சியாகத் திகழ்ந்தார்.


‘எருசலேமே, எருசலேமே, இறைவாக்கினரைக் கொல்லும் நகரே, உன்னிடம் அனுப்பப்பட்டோரைக் கல்லால் எறிகிறாயே. கோழி தன் குஞ்சுகளைத் தன் இறக்கைக்குள் கூட்டிச் சேர்ப்பதுபோல நானும் உன் மக்களை அரவணைத்துக்கொள்ள எத்தனையோ முறை விரும்பினேன். (மத்தேயு 23: 37) என்று தன் தாய்மைப் பண்பை வெளிப்படுத்துகிறார்.

தந்தையாகிய கடவுள் நம்மீது வைத்திருக்கும் அன்பின் காரணமாக, நம்முடைய மரியாதையை மீட்டெடுக்க அவர் தனது முதல் மற்றும் ஒரே மகனின் உயிரைக் கொடுத்தார்.

இயேசுவின் தேடிச் சென்று அணுகுதல்:
இக்காலக் கட்டத்தில் இயேசுவின் வாழ்வில் முதலிடம் பெற்றவர்கள், யாரெனில் சமூகத்தில் புறக்கணிக்கப்பட்டவர்கள். இப்படிபட்ட நிலையில் இருந்தவர்களைத் தேடிச் சென்று இயேசு தொடுகின்றார். அவரின் அனுகிச் சென்று தொடுதல் என்பது பல பேரின் வாழ்வை மாற்றியிருக்கிறது. குறிப்பாக இயேசு பெண்களின் நம்பிக்கையையும் அவர்களின் செயல்களையும் விமர்சித்துக் கொண்டிருந்த யூதர்களின் சிந்தனைக்கு சாட்டையடி கொடுக்கிறார்.

இயேசுவின் தாய் மரியாள்:

இயேசுவை இவ்வுலகிற்கு கொண்டு வர கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் இயேசுவின் தாய் மரியாள். ஒதுக்கப்பட்டவர்களையும், புறக்கணிக்கப்பட்டவர்களையும் தம் மீட்புத் திட்டத்தின் பங்குதாரர்களாக்குவது இறைவனின் செயல். கடவுள் நினைத்திருந்தால் இறைமகன் இயேசு இவ்வுலகிற்கு வர வேறு வழியை தேர்ந்தெடுத்திருக்கலாம். ஆனால் அவர் மரியாவைத் தேர்ந்தெடுத்து, இறுதிவரை சிலுவையடியில் இயேசுவோடு நின்று, துவண்டு போயிருந்த சீடர்களை தேற்றுகிறார்.

விபச்சாரத்தில் ஈடுபட்ட பெண்
விபத்தில் பிடிப்பட்ட பெண்ணை பரிசேயரும், மறைநூல் அறிஞர்களும் இயேசுவின் முன் இழுத்து வந்து அவளுக்கு தீர்ப்பளிக்க இயேசுவிடம் கேட்டுக் கொள்கின்றனர். யூதச் சட்டப்படி விபாச்சாரத்தில் பிடிப்பட்ட ஆணும், பெண்ணும் கொல்லப்பட வேண்டும். இணைச்சட்டம் 22:22. ஆனால் இங்கே பெண் மட்டும் கூட்டி வரப்படுகிறாள். இயேசு அவர்கள் தம்மை சிக்கவைப்பதற்காக அழைத்து வந்திருப்பதை தெரிந்துக் கொண்டு உங்களில் பாவம் இல்லாதவர் இவள் மீது கல்லெறியட்டும் என்று கூறுகிறார். அனைவரும் அவளை விட்டுச்சென்றுவிட்டனர். இயேசு அப்பெண்ணிடம் நானும் தீர்ப்பாளிக்கவில்லை இனி பாவம் செய்யாதீர் என்று கூறி அனுப்பி விடுகிறார். (யோவான் 8: 1- 11)

ஏழைப் பெண்ணின் தானம்:
பெண்களை பொருட்டாக நினைக்காத, மதிக்காத சமூகத்தில்; ஒரு ஏழைப் பெண் தன்னிடம் உள்ள 2 செப்புக் காசுகளை காணிக்கைப் பெட்டியில் போட்டு விடுகிறாள். தனக்கென இருந்த எல்லாவற்றையும் காணிக்கையாக்கிய ஏழை விதவைப் பெண்ணின் குணத்தை பாராட்டுகிறார் இயேசு. (லூக்கா 12:43)

இயேசுவும் பெண் சீடர்களும்:
இயேசுவுக்கு பல பெண் சீடர்கள் இருந்தார்கள். ஏரோதுவின் மாளிகை மேறபார்வையாளரான் கூசாவின் மனைவி யோவான்னா, சூசன்னா, மகதலேன்மரியா ஆகியோர் இயேசுவின் சீடராக அவர் பின் சென்றனார். இயேசு ஒவ்வொருவருக்கும் அவர்களுக்கான மரியாதை கொடுக்கிறார், அவர்களின் மாண்பை உயர்த்துகிறார். நற்செய்திப் பணியை அறிவித்தவர்கள் இயேசுவின் ஆண் சீடர்கள் மட்டுமல்ல, அவரின் பெண் சீடர்களும் அவரோடு இருந்து பல உதவிகள் செய்தனர். (லூக்கா 8:1-2)

மார்த்தாவின் பணிவிடை:
மார்த்தாவின் பணிவிடை புரியும் குணம் இயேசுவைக் கவர்ந்தது. மார்த்தா என்னும் பெயருக்கு வீட்டு பெண் உரிமையாளர் என்று பெயர். இயேசுவுக்கும், சீடர்களுக்கும் பணிவிடை அக்கறையுடன் பணி செய்கிறார். (லூக்கா 10: 40);
மார்த்தா இயேசுவை நோக்கி, ‘ஆண்டவரே, நீர் இங்கே இருந்திருந்தால் என் சகோதரன் இறந்திருக்க மாட்டான். இப்போதுகூட நீர் கடவுளிடம் கேட்பதை எல்லாம் அவர் உமக்குக் கொடுப்பார் என்பது எனக்குக் தெரியும்’ என்றார். ஆம் ஆண்டவரே, நீரே மெசியா! நீரே இறைமகன்! நீரே உலகிற்கு வரவிருந்தவர் என நம்புகிறேன்’ என்றார்.மார்த்தாவின் அசைக்க முடியாத நம்பிக்கை பைபிளில் இடம் பெறக்கூடிய அளவுக்கு முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. மார்த்தாவின் ஒவ்வொரு வார்த்தையும் இன்று நமக்கு முன்னுதாரணமாகிறது.

திருத்தூதர்களின் திருத்தூதர் மகதலா மரியா:
பாவி என பழிசுமத்தப்பட்ட பெண் இயேசுவுக்கு பின்னால் காலடியில் வந்து அமர்ந்து அழுது கொண்டு இயேசுவின் காலடிகளை தம் கண்ணீரால் நனைத்து கூந்தலால் துடைத்து நறுமணதைலம் பூசி தொடர்ந்து முத்தமிடுகிறார் இயேசு பாவியான பெண்ணை ஏற்றுக் கொண்ட செயல் விமர்சிக்கப்படுகிறது. இயேசுவும் அவ்வாறு எண்ணியவர்களுக்கு ஒரு உவமை வாயிலாக பதிலடிக் கொடுத்து அந்த பெண்ணை பார்த்து உம் நம்பிக்கை உன்னை மீட்டது என சொல்லி அனுப்பி வைக்கிறார். அன்றோடு மாறியது அவளின் வாழ்வு! (லூக்கா 7: 38)


இயேசு மகதலா மரியாவிடம் இருந்து 7 பேய்களை விரட்டியிருந்தார். அவருக்கே இயேசு தாம் உயிர்த்த பின் காட்சியளித்து தமது உயிர்ப்பை உலகிற்கு அறிவிக்கும் கருவியாக மகதலேன் மரியாவை தேர்ந்தெடுக்கிறார். அவர் வாயிலாகவே தம் உயிர்த்துவிட்;ட செய்தியை சீடருக்கு அறிவிக்க அனுப்பியதால் அவர் இன்றும் திருத்தூதர்களின் திருத்தூதர் என்று அழைக்கப்படுகிறார். அவள் இயேசு மீது கொண்ட அன்பு விடியற்காலையில் இயேசுவின் உடலுக்கு நறுமணம் தைலம் பூச செல்ல விரைந்து செல்ல செய்தது. என் ஆண்டவரை எங்கே வைத்தீர் எனச் சொல்லும், நான் அவரை தூக்கிக் கொண்டு செல்வேன் என இயேசுவிடமே அவளின் அன்பு கேட்கச் செய்தது. (யோவான் 20: 11-18)

இரத்தப்போக்கினால் அவதியுற்றப் பெண்:
பெண்களுக்கான மாதவிலக்கு தீட்டு என கருதும் இக்காலத்தில் அதனால் ஏற்படும் வலிகளை ஆண்களால் புரிந்து கொள்ள முடியாது. ஆனால் இயேசு 12 ஆண்டுகளாக இரத்தப் போக்கினால் அவதியுற்ற அப்பெண்ணின் வலிகளை அறிந்திருந்தார். இயேசு உடலின் துன்பத்தை மட்டும் அறிந்துக் கொண்டார் என்பது மட்டும் அல்ல அன்றைய யூத சமுதாயத்தில் உதிரப்போக்கு உள்ள காலம் முழுவதும் அப்பெண்கள் தீட்டு அனுசரிக்க வேண்டும் என்பதையும் அவள் யாருடனும் இயல்பாக பழகாமல் தனித்திருக்க வேண்டும். அவள் யாரை தொட்டாலும், தொடப்பட்டாலும் இருவருமே தீட்டு அனுசரிக்க வேண்டும் என்ற சட்டத்தை அறிந்திருந்தார். அப்பெண் அச்சட்டத்தை அறிந்திருந்தாள். இத்தகைய சூழலில் அவள் இயேசுவின் மீது ஆழ்ந்த நம்பிக்கை கொண்டு அவரது ஆடையின் விளிம்பையாவது தொட்டால் தனக்கு நோய் நீக்கும் என்று நம்பி கூட்டத்தை விலகி கொண்டு இயேசுவின் ஆடையின் விளிம்பை தொடுகிறாள், உடனே தான் நலம் பெற்றதை உணர்கிறாள்.

அதற்கு இயேசு, ‘யாரோ ஒருவர் என்னைத் தொட்டார்; என்னிடமிருந்து வல்லமை வெளியேறியதை உணர்ந்தேன்’ என்றார். (லூக்கா 8: 46)

இப்பொழுது அவள் இயேசு உட்பட அக்கூட்டத்தில் இயேசுவை சூழ்ந்திருந்தவர்களையும் தீட்டுப்படுத்திவிட்டாள் என்பது உண்மை, ஆனால் இதை அறிந்தவர் இயேசு மட்டுமே. இயேசு பேசமால் போய்விடவில்லை தம்மை தொட்டது யார் என்று வினவுகிறார். அந்த பெண் தனக்கு நேர்ந்ததை கூற இயேசு அவரிடம் மகளே உனது நம்பிக்கை உன்னை நலமாக்கியது. அமைதியுடன் போ’ (லூக்கா 8: 48) என்று கூறி அனுப்பிகிறார். தீட்டு என மனிதன் கருதியதை இயற்கை தான் என இயேசு நிருபிக்கிறார்.

சமாரியப் பெண்:
இயேசு அவரிடம், ‘குடிக்க எனக்குத் தண்ணீர் கொடும்’ என்று கேட்டார். அச்சமாரியப் பெண் அவரிடம், ‘நீர் யூதர்; நானோ சமாரியப் பெண். நீர் என்னிடம் குடிக்கத் தண்ணீர் கேட்பது எப்படி?’ என்று கேட்டார். ஏனெனில், யூதர்கள் சமாரியரோடு பழகுவதில்லை.
யூதர்கள் சமாரியர்களை தீண்டத்தகாதவர்களாக கருதினர். சமாரிய பெண் ஐவரை மனைவியாகக் கொண்டிருந்தார்.இயேசுவின் உரையாடல் அவரை நற்செய்தி அறிவிப்பவராக மாற்றியது. இயேசுவின் சந்திப்பு கடவுளுக்கு உகந்த வாழ்வை வாழ உதவியது.

தமக்கானவர்களை தேர்ந்தெடுக்க இயேசு களமிறங்குகிறார்.

கனானியப் பெண்:
விவிலிய பாரம்பரியத்தின்படி, கானானியர்கள் இஸ்ரயேலரின் எதிரி மற்றும் வேற்றினத்தவர்கள் (ஷின் 2014: 5). கானானியப் பெண் இயேசுவிடம் உதவி வேண்டி நிற்கும் பொழுது ஐயா, தாவிதீன் மகனே, எனக்கு இரங்கும்; என் மகள் பேய் பிடித்துக் கொடுமைக்குள்ளாகி இருக்கிறாள்’ எனக் கதறினார். ஆனால், இயேசு அவரிடம் ஒரு வார்த்தைகூட மறுமொழியாகச் சொல்லவில்லை. சீடர்கள் அவரை அணுகி, ‘நமக்குப் பின்னால் கத்திக்கொண்டு வருகிறாரே, இவரை அனுப்பிவிடும்’ என வேண்டினர். அவரோ மறுமொழியாக, ‘இஸ்ரயேல் குலத்தாருள் காணாமற்போன ஆடுகளாய் இருப்போரிடமே நான் அனுப்பப்பட்டேன்’ என்றார். ஆனால், அப்பெண் அவர்முன் வந்து பணிந்து, ‘ஐயா, எனக்கு உதவியருளும்’ என்றார். அவர் மறுமொழியாக, ‘பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து நாய்க் குட்டிகளுக்குப் போடுவது முறையல்ல’ என்றார். உடனே அப்பெண், ‘ஆம் ஐயா, ஆனாலும், தங்கள் உரிமையாளரின் மேசையிலிருந்து விழும் சிறு துண்டுகளை நாய்க்குட்டிகள் தின்னுமே’ என்றார். இயேசு மறுமொழியாக, ‘அம்மா, உமது நம்பிக்கை பெரிது. நீர் விரும்பியவாறே உமக்கு நிகழட்டும்’ என்று அவரிடம் கூறினார். அந்நேரம் அவர் மகளின் பிணி நீங்கியது.(மத்தேயு 15: 21-28). கார்ட்டர் (2000:321-322) கானானியர்கள் யூதர்களுக்கு எதிரிகள் என்பதைக் காட்டுகிறார்.


இயேசு கானானியப்பெண்ணிடம் கோபமாகப் பேசுவது போல தோன்றினாலும் அவர் அப்பெண்ணின் நம்பிக்கையை வெளிப்படுத்தவே அவ்வாறு பேசுகிறார். அதில் வெற்றியும் பெறுகிறார். கடைநிலையில இருப்போரையும் அடையாளப்படுத்தும் இயேசுவின் பண்பே நாம் அனைவரும் பின்பற்ற வேண்டியது.

யாயீரின் மகள்:
இந்த இடத்தில் செப கூடத்தலைவன் யாயீர் தன் மகளை இறப்பில் இருந்து எழுப்ப இயேசுவிடம் வேண்டி நிற்கின்றான். யாயீருக்கு இப்பொழுது இயேசு, அவரது சீடரும் உட்பட அங்கிருந்த மற்றும் பலர் தீட்டு உள்ள பெண்ணால் தொடப்பட்டவர்கள் என்று அறிந்தும் யாயீர் அதை பொருட்படுத்தவில்லை. இயேசுவை தன் வீட்டிற்கு அழைத்து செல்கிறான். இயேசுவும் அவருடைய 3 சீடரும் செல்கிறார்கள். மற்றொரு செய்தி என்ன என்றால் ராபிகள் இறந்தவர் உடலை பார்ப்பதும், தொடுவதும் கூட தீட்டு என்று சட்டம் கூறியது. எனவே இந்த அறிகுறியின் வாயிலாக பெண்களை குறித்து இயற்றப்பட்ட பழைய சட்டத்தை இயேசு முறித்துப்போடுகிறார். தன்னை நம்பாத, ஏற்றுக் கொள்ளாத மக்களிடமும் செல்கிறார் இயேசு.

எருசலேம் மகளிர்:
பெண் – பெண்கள் அழுவதற்கு மட்டுமே என்று ஏற்றவர்கள் என்று கருதப்பட்ட நிலையில் இயேசு சிலுவை சுமந்துக் கொண்டு செல்லும் போது பல பெண்கள் அழுதுக் கொண்டு துணிவுடன் செல்கிறார்கள். துன்பத்தில் இருப்போரைத் தேடித் சென்று உதவுதல் என்பதே இயேசு நமக்கு காட்டும் மாதிரி.

இயேசுவின் பாடுகளின் போது அவருடைய ஆண் சீடர்கள் பயந்து தப்பி ஒடி விடுகிறார்கள். ஆனால் அவருக்காக அழுது புலம்பி மாராடித்துக் கொண்டு இயேசுவின் பின்னால் சென்றவர்கள் பெண்களே. (லூக்கா 23: 27-28) அன்பு, பரிவு, துனிவு என பல மேன்மையான குணங்களை கொண்டது பெண்ணின் இதயம். நற்செய்தி பார்க்கும் பொழுது அவரது இறப்பு உயிர்ப்பு வரை பெண்களின் பங்கு அதிகமாகவே காணப்படுகிறது.

நம் நாட்டில் பெண்களின் நிலை:
பெண்களுக்கு பாதுகாப்பே இல்லாத நாட்டில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். மணிப்பூரில் நடந்து கொண்டிருக்கும் வன்கொடுமைகள் குறிப்பாக பெண்கள் நடத்தப்படும் விதம் நாட்டையே நிலை குலையைச் செய்தது. நம் நாட்டில் பெண்கள் இரண்டாம் குடிகள் என்றால் தலித் மற்றும் ஆதிவாசிப் பெண்கள் அதைவிட மிகவும் மோசமாக நடத்தப்படுகின்றனர். ஒவ்வொரு நாளும் 3 தலித் பெண்கள் பாலியல் வன்புணர்வு செய்யப்படுகிறார்கள் என தரவுகள் கூறுகின்றன. வீட்டுக்குள் அடிமைப்படுத்தப்படுகிறோம். கல்வியில் முன்னேயிருந்தாலும், நம்மை நாம் தகுதிப்படுத்தியிருந்தாலும் இன்றும் நாம் இச்சமூகத்தில் இரண்டாம் நிலைக்குடிகளே. நாம் பிறரை சமூகக் கட்டுகளிலிருந்து விடுவித்து நம்மையே எப்போது விடுதலை அளிக்கப்போகிறோம். இயேசு நமக்கு ஏற்கனவே விடுதலை தந்து விட்டார். நாம் எப்போது அதை பயன்படுத்தப் போகிறோம்? மாற்றத்தின் கருவிகளாக நாம் மாற வேண்டும். இயேசு நமக்கு முன்னுதாரணமாய் இருக்கிறார். அவர் நம் மாண்பை உயர்த்தினார். நாம் என்று பிறரின் குரலாகப் போகிறோம்?

நாம் எப்போது களமிரங்கப் போகிறோம்?
அன்று நம் மீட்புக்காக களமிறங்கிய கடவுள் நம் ஒவ்வொருவருக்கும் கொடுத்த பணி என்ன? ஒடுக்கப்பட்ட, புறக்கணிக்கப்பட்ட மக்களுக்காக களமிறங்கிய கடவுளைப்போல நாம் மாற முடியுமா? நம் சுக போக வாழ்விலிருந்து எழுந்து தேவையில் இருப்போருக்காக, துன்புறுவோருக்காக காலம் இறங்க முடியுமா? இயேசு நம்மீது கொண்ட அன்பு அவரை சிலுவையில் ஏற்றியது. அதனால் நாம் மீட்படைந்தோம். பிறர் மீட்படைய நாம் என்ன செய்யப் போகிறோம். நம் விசுவாசமும் அதோடு கூடிய செல்லுமே நம்மை இயேசுவைபோல களமிறங்கச் செய்யும்.

கடவுள் ஒவ்வொரு பெண்ணுக்கும் தரும் வாக்குறுதிகள்:

உன்னை நான் அன்பு செய்கிறேன்
தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்பு கூர்ந்தார் (யோவான் 3 : 16)

உன்னை நான் குற்றவாளியென்று தண்டிக்கவில்லை
கிறிஸ்து இயேசுவோடு இணைந்திருப்போருக்கு இனித் தண்டனைத் தீர்ப்பே கிடையாது (உரோமையர்8:1)

உன்னை என்னோடு இணைத்துக் கொண்டேன்
எனவே, இனி நீங்கள் அந்நியர் அல்ல் வேற்று நாட்டினரும் அல்ல. இறைமக்கள் சமுதாயத்தின் உடன் குடிமக்கள்; கடவுளின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் (எபேசியர் 2:19)

உன்னை நான் ஏற்றுக் கொள்கிறேன்
ஆகையால், கிறிஸ்து உங்களை ஏற்றுக் கொண்டது போல நீங்களும் ஒருவரை ஒருவர் ஏற்றுக்கொள்ளுங்கள். அப்போது கடவுளைப் பெருமைப்படுத்துவீர்கள். என் கருத்து இதுவே (உரோமையர் 15: 7)

உன்னை நான் தனியே விடவில்லை
ஆயினும், நான் தனியாய் இருப்பதில்லை. தந்தை என்னோடு இருக்கிறார்.(யோவான் 16: 32)

நான் உன்னை அற்புதமாக உருவாக்கியிருக்கிறேன்
அஞ்சத்தகு, வியத்தகு முறையில் நீர் என்னைப் படைத்ததால்,
நான் உமக்கு நன்றி நவில்கின்றேன் (திருப்பாடல்கள் 139: 14)

உன்னை நான் விடுவித்தேன்
மகன் உங்களுக்கு விடுதலை அளித்தால் நீங்கள் உண்மையிலே விடுதலை பெற்றவர்களாய் இருப்பீர்கள். (யோவான் 8:36)

நீ என்னுடையவள்
அவரிடம் நம்பிக்கை கொண்டு அவரை ஏற்றுக்கொண்ட ஒவ்வொருவருக்கும் அவர் கடவுளின் பிள்ளைகள் ஆகும் உரிமையை அளித்தார். (யோவான் 1: 12)

உன்னை நான் தேர்ந்தெடுத்தேன்
நீங்கள் கடவுளால் தேர்ந்துகொள்ளப்பட்டவர்கள், அவரது அன்பிற்குரிய இறைமக்கள் (கொலோசேயர் 3: 12

உன் பாவத்திலிருந்து உனக்கு விடுதலையளித்தேன்
நாம் இனிமேல் பாவத்துக்கு அடிமைகளாய் இராதபடி, நம்முடைய பழைய மனித இயல்பு அவரோடு சிலுவையில் அறையப்பட்டிருக்கிறது. (உரோமையர் 6:6)

அருட்சகோதரி. முனைவர். ரொபான்ஸி அ ஹெலன்.

கத்தோலிக்க அருட்சகோதரி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *