women, crowd, protest

WOMEN PARTNERS IN GOD’S LIBERATIVE ACT

திருமறை பகுதிகள்

யாத்திராகமம் 1: 15 – 22
மாற்கு 15: 37 – 41
ரோமர் 16: 1 – 16

உட்புகு முன்

# திருமறையில் உள்ள பெண்களுக்கு அவரின் செயலை மையமாக வைத்து ஏதாவது ஒரு பெயர் வைத்தால் எப்படி இருக்கும் என்று யோசிக்கும் பொழுது இப்படி தோன்றினது…

மரியாள் : மீட்பின் கருவி
எஸ்தர் : இன போராளி
தெபோராள் : முன்கள பணியாளர்
ரூத் : புதிய வரலாறு
பெபேயாள் : திருச்சபை தூண்
தொற்க்காள் : சமூக நல பணியாளர்
லீதியாள் : திருச்சபை நிறுவனர்….
இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்…..


# அப்பிக்கோ இயக்கம், 1983 (Appico Movement), சிப்கோ இயக்கம், 1973 (Chipko movement) என்ற பெண்கள் இயக்கம், இந்திய விடுதலை வரலாற்றில் மாபெரும் ஒரு இயக்கம். இயற்கை வளங்களை அழித்து தொழிற்சாலைகளை கட்டுவதற்காக அரசு முனைந்த பொழுது, பெண்கள் ஒன்று கூடி ஒரு இயக்கமாக வளர்ந்து, அரசின் இந்த திட்டத்திற்கு மாபெரும் ஒரு பெரிய எதிர்ப்பை வரலாற்றில் முன்னெடுத்தார்கள். காடுகளை அழிக்கும் பொழுது பெண்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து மரங்களை கட்டி தழுவி மாபெரும் போராட்டத்தை முன்னெடுத்தார்கள். பெண்களின் கூட்டமைப்பு வளங்களை பாதுகாப்பதற்கு மட்டுமல்ல அடுத்த தலைமுறைக்கு வளங்களை பத்திரப்படுத்துவதற்கும் இறைவன் தந்த பொறுப்புணர்வை நிறைவேற்றுவதற்கும், இந்த போராட்டம் மாபெரும் போராட்டமாக உருவெடுத்தது… இறைவனின் கருவியாக விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு அளவிட முடியாதது …


# “யூத இன விடுதலை” வரலாறு சிப்போராள், பூவாள் என்ற பெண்மணிகளால் துவங்கப்பட்டது. ஒட்டுமொத்த “மனுகுல விடுதலை” வரலாறு மரியாள் என்ற பெண்மணியால் முன்னெடுக்கப்பட்டது….
திருமறை பகுதியின் வழியாக நமக்கு கொடுக்கப்படும் அறைகல்களையும், வழிகாட்டுதல்களையும் நாம் தியானமாக சிந்திப்போம்…

1. ஒத்துழையாமை இயக்கத்தை முன்னின்று நடத்தினார்கள் (Non Co-operation Movement). யாத்திராகமம் 1: 15 – 22

இஸ்ரவேலரின் (எகிப்து) அடிமைத்தன வரலாறு ஆண்களால் உருவானது. இஸ்ரவேலரின் விடுதலை வரலாறு “சிப்போராள், பூவாள்” என்னும் பெண்களால் உருவானது என்பதை மறுக்க முடியாது…
இஸ்ரவேல் மக்களின் எண்ணிக்கை எகிப்தியருக்கு அச்சத்தை உண்டாக்கியது. ஒருவேளை அவர்களின் எழுச்சி எகிப்தியருக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்று கருதி மாபெரும் யூத இனப்படுகொலைக்கு ( Genocide) அரசரும் அரண்மனையும் திட்டமிடுகின்றது…


கருக்கலைப்பிற்கும், கரு சிதைவிக்கும் (Infanticide) இஸ்ரவேல் பெண்கள் கட்டாயப்படுத்தப்படுகின்றார்கள். ஆண் குழந்தைகள் கொல்லப்பட வேண்டும் என்று சட்டமும் இயற்றப்படுகிறது….
இந்தச் சட்டங்களை யூத பெண்களை வைத்து யூத சமூகத்திற்கு எதிராக செயல்படுத்துவது என்பது எவ்வளவு பெரிய வன்கொடுமை, அதை நிறைவேற்ற அரசு முனைப்போடு செயல்பட்டது. திட்டமிட்டு ஒரு பெரிய யூத இனப்படுகொலை எகிப்தியரால் நடந்தேறியது….


மோசேயின் “விடுதலை பயணத்தை” நாம் நினைக்கும் போதெல்லாம், நம் அடி மனதில், ஒரு ஓரத்தில் இந்த சிப்போராள், பூவாள், என்ற பெண்மணிகள், நம் நினைவில் கட்டாயம் வந்து போவார்கள். இஸ்ரவேலரின் விடுதலைப் பயணத் திட்டத்தில், இந்த இரு அம்மையாரும் ஒரு “துவக்க புள்ளிகளாக” (Starting Point), கடவுள் பயன்படுத்தியிருக்கின்றார், அல்லது கடவுள் இவர்களின் துணையை நாடி இருக்கின்றார், அல்லது இவர்களின் விடுதலைத் திட்டத்தில் கடவுள் இணைந்து இருக்கிறார் என்றும் நாம் புரிந்து கொள்ளலாம்…


எகிப்தின் அரச கட்டளைக்கு உடன்படுவதா அல்லது இறைவனின் மீட்பு திட்டத்திற்கு உடன்படுவதா என்ற சிக்கலான சமயத்தில், தீர்க்கமான முடிவு எடுக்கின்றார்கள் இந்த இரு பெண்மணிகள். அரசரின் கட்டளைக்கு உடன்படாமல் இருப்பது, “ஒத்துழையாமல் இருப்பது(Non Co-operation ) ” என்ற அந்த தீர்க்கமான முடிவை இருவரும் கருத்தில் இணைந்து, கரங்களை இணைத்து, கருத்தொற்றுமையோடு முடிவெடுத்து அதில் நிலைத்து நின்றார்கள்…


இஸ்ரவேலரின் இனப்படுகொலைக்கு எதிராக, இந்த இரு பெண்மணிகளும் “ஒத்துழையாமை இயக்கத்தை (Non Cooperation Movement) தோற்றுவித்தார்கள். அதை முன் நின்று நடத்தினார்கள். அதில் வெற்றியும் பெற்றார்கள்….
ஏன் ஆண் மக்களை கொல்லவில்லை என்று கேட்கும் பொழுது அந்த இரு பெண்மணிகளும் யூத பெண்கள் “வலிமையானவர்கள்”, அவர்களே தங்களுக்கான பிரசவத்தை பார்த்துக் கொள்கிறார்கள் என்று எதிர்வினையாற்றுகின்றார்கள். யூத பெண்கள் சார்ந்து (Not a Dependent) இருப்பவர்கள் அல்ல மாறாக அவர்கள் தனித்து நிற்பவர்கள் (Independent) என்று பெண்களின் வலிமையையும் ஆற்றலையும் அவர்கள் பதிவு செய்கின்றார்கள்….


அரசரின் கட்டளைக்கு மீறினால் உண்டாகும் தண்டனை எல்லாவற்றையும் தெரிந்து அதன் விளைவுகளையும் அறிந்து உறுதியான திடமான அதே சமயம் தீர்க்கமான ஒத்துழையாமை இயக்கத்தை அவர்கள் துவங்கி அதை முன்னின்று நடத்தினார்கள் என்பதை இந்த திருமுறை பகுதி நமக்கு தெளிவாக காட்டுகின்றது…
இந்த இரு பெண்மணிகளும் துவங்கின இந்த ஒத்துழையாமை இயக்கத்தில் பலர் இணைந்திருக்கலாம். அவர்களின் பெயர்கள் குறிப்பிடப்படாவிட்டாலும் விடுதலை பயணத் திட்டத்தில் இந்த இரு பெண்மணிகளின் பெயர்களும் நீங்காத இடம் பெற்றுள்ளன…


எகிப்து அரசரின் இனப்படுகொலைக்கு எதிராக இந்த இரு பெண்மணிகளும் துணிந்து களத்தில் நின்று இறைவனின் மீட்பு திட்டத்தில் தங்களை பங்காளிகளாக ஆக்கிக் கொண்டார்கள்…


கரு சிதைப்பிற்கு தப்பித்த எத்தனையோ ஆண் குழந்தைகளில் ஒருவராக நிச்சயம் மோசேயும் இருந்திருப்பார் என்பது நமது நம்பிக்கை… இந்த இரு பெண்மணிகளும் “பெண்கள் ஐக்கிய சங்கத்திற்கு (Women Fellowship)” ஒரு முன்னோடியாக இருந்திருக்கிறார்கள் என்பதை உணர முடிகிறது. இந்த சங்கம், “பெண் விடுதலைக்கும், இன விடுதலைக்கும் போராடினவர்கள்” என்பதையும் நமக்கு தெளிவாக எடுத்துக்காட்டுகிறது….


ஒத்துழையாமை இயக்கம் என்பது எவ்வளவு பெரிய இயக்கம் என்பதை நாம் இந்திய சூழலில் நாம் அறிந்திருக்கிறோம். ஆனால் எகிப்தில் அடிமைப்பட்டு கிடந்த யூத சமூகத்தில் யூத பெண்கள் அன்றே ஒத்துழையாமை என்ற மாபெரும் இயக்கத்தை கட்டமைத்து அதை முன் நின்று நடத்தி இருக்கிறார்கள் என்பதை திருமறை நமக்கு தெளிவாக காட்டுகின்றது.


இறைவனின் விடுதலை திட்டத்தில் பங்காளிகளாக பெண்கள் தங்களை இணைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது இன்றைய சமூகத்திற்கு ஒரு அறைகூவல்…
விடுதலைக்கான போராட்டங்களில் துணிந்து பங்கேற்ற இந்த இரு பெண்மணிகளுக்கும் அவர்களோடு இணைந்திருந்த அத்தனை பெண்களுக்கும் வீரவணக்கம் செலுத்துவோம்….

அறவழிப் போராட்டத்தை துவக்கினார்கள் (Non Violence Movement). ரோமர் 16: 1 – 16.
திருத்தூதுவராகிய பவுல் நீண்ட பெண்களின் பெயர் பட்டியலை தன்னுடைய திருச்சபைக்கு நினைவூட்டி எழுதுகின்றார். ஒவ்வொருவருக்கும் தன் வாழ்த்துக்களை தெரிவிக்கின்றார். அத்தனைப் பெண்களின் வாழ்க்கையையும், அவர்களின் பங்களிப்பையும், இறைவன் துவங்கின தமது விடுதலைப் பயணத்தில் இவர்களின் பங்கு அளவிட முடியாதது என்பதை வளரும் திருச்சபைக்கு கடிதம் வாயிலாக நினைவூட்டுகின்றார்….


ஆக்கில்லா – பிரிஸ்கில்லா என்ற தம்பதிகள் பற்றி பவுல் குறிப்பிடும் பொழுது இவர்கள் எனக்காக தங்கள் “கழுத்தை கொடுத்தவர்கள்” என்று எழுதுகின்றார். இது வெறும் வார்த்தை மட்டுமல்ல பவுலின் அனுபவத்தில் தன்னோடு இணைந்து தனக்காக துணை நின்றவர்களை மறவாமல் அடுத்த தலைமுறைக்கு பகிர்ந்து கொள்கிறார்…
பவுல் அடியார் கிறிஸ்துவின் நிமித்தம் பல பாடுகளையும் துன்பங்களையும் சந்தித்தார் என்பது நாம் அறிந்த ஒன்று. அப்படி பல துன்பங்களில் பலர் அவரோடு பங்கு எடுத்திருக்கின்றார்கள். குறிப்பாக இந்த தம்பதிகள் பவுல் அடியாருக்கு அவரின் துன்பத்தில் துணையாக நின்றதோடு தங்கள் கழுத்தையும் தர தயாராக இருந்தார்கள் என்பது “வீர மரணம்”, இரத்த சாட்சியாக மரிப்பதற்கு இணையான ஒன்று என்பதை பவுல் அடியார் அழுத்தமாக குறிப்பிடுகின்றார்…


தங்கள் கழுத்தை கொடுத்தார்கள் என்பதை வேறு கோணத்தில் பார்த்தால், இந்த இருவரும் கிறிஸ்துவின் விடுதலைப் போராட்டத்தில் “அறவழியில் போராடினார்கள்”” ( Non Violence) என்பதை அறிய முடிகின்றது….
அறவழி போராட்டம் என்பது மிகப்பெரிய போராட்ட யுக்தி. எந்தவித ஆயுதங்களும் இல்லாமல் தங்களை எதிர்க்கின்றவர்களுக்கு துணிந்து நிற்பது தான் அறவழி போராட்டம். இதற்கு மிகப்பெரிய துணிவு வேண்டும் ஆற்றல் வேண்டும்….
திருத்தூதவர் பவுல் கிறிஸ்துவின் வழியில் கடவுளின் விடுதலைத் திட்டத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். பவுல் அடியாரோடு இந்த தம்பதிகளும் இவர்களைப் போன்ற பல தம்பதிகளும், பெண்களும் கடவுளின் விடுதலை பயணத் திட்டத்தில் கிறிஸ்துவின் வழியில் அறவழியில் தங்கள் போராட்டத்தை தொடங்கினார்கள், அதை செயல் வடிவில் காட்டினார்கள்…


பாடுபடும் தாசன் என்று ஏசாயா குறிப்பிடுவதைப் போல, பாடுபடும் தாசராகவே வாழ்ந்து மரித்து உயிர்த்த இயேசு கிறிஸ்துவை போல, இந்த தம்பதிகளும் அறவழியில் கடவுளின் மீட்பு திட்டத்தில் தங்களை இணைத்துக் கொண்டார்கள்…
ஆதித்திருச்சபை இப்படிப்பட்ட அறவழிப் போராட்டத்தில் உருவானது என்பதை திருமறைப் பகுதி நமக்கு விளக்குகின்றது.


திருமறைப் பகுதியில் கொடுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு பெண்களும் ஆதி திருச்சபையில் அடித்தளங்கள்( Founders), தூண்கள்(Pillars), முன்னோடிகள்(Pioneer), தலைவர்கள்(Leaders), உதவியாளர்கள்(Deaconess), உடன் பணியாளர்கள்(Co-workers), … என்று அவர்களின் பணிகளையும் பங்கெடுப்புகளையும் பவுல் அடியார் குறிப்பிடுகின்றார்….
கடவுளின் மீட்பு திட்டத்தில் பெண்களை மீட்பின் கருவியாக, நியாயாதிபதிகளாக, தீர்க்கர்களாக, சீடர்களாக பயன்படுத்தப்பட்டவர்கள் ஆதித்திருச்சபயிலும் அறவழி போராட்டத்தில் கடவுள் அவர்களை பயன்படுத்தி இருக்கின்றார் என்பது புதிய வரலாறு….


யூத சமயம் ஆண்களை ஆசாரியர்களாக, பரிசேயர்களாக, சதுசேயர்களாக… உருவாக்கி அவர்களை விடுதலைக்கு எதிராக அடிமைத்தனத்திற்கு பயன்படுத்தினது. இயேசு கிறிஸ்து ஆதித்திருச்சபையில் பல பெண்களை விடுதலைக்கு நேராக விடுதலைப் பணியாளர்களாக, மீட்பின் கருவிகளாக, பணியாளர்களாக உருவாக்கி பயன்படுத்தினார். இது “எதிர் சீர்திருத்தம்” என்று புரிந்து கொள்ளலாம்( Counter Reformation)….


இயேசு கிறிஸ்துவால் உருவாக்கப்பட்ட இந்த “எதிர் சீர்திருத்தத்தில்” ஆக்கில்லா – பிரிஸ்கில்லா போன்ற பல தம்பதிகள் மற்றும் பெண்கள் அறவழியில் (Non Violence Model) இயேசு கிறிஸ்துவின் இயக்கத்தை முன்னின்று எடுத்துச் சென்றார்கள்…. இன்றைய நமது சீர்திருத்த திருச்சபைகளில் ஏதாவது ஒரு திருச்சபையின் பெயர் பெண்களின் பெயரில் உள்ளதா என்பதை ஆராய்ந்து பார்ப்போம். ஏன் அப்படிப் பெண்களின் பெயர் வைக்கவில்லை என்பதை நாம் திறனாய்வு செய்ய அழைக்கப்படுகிறோம்…..

2. உடல் மொழி இயக்கத்தை முன்னெடுத்தார்கள் ( Non Verbal Movement)

மாற்கு 15: 37 – 41.

விடுதலைப் போராட்டத்தில் பலர் பல்வேறு வகைகளில் பங்கெடுப்பார்கள், சிலர் ஆயுதங்களோடு, சிலர் ஆயுதங்கள் இன்றி, சிலர் அமைதி வழியில் (Silence) போராடுவர் அமைதி வழி போராட்டம்.( Non Verbal). என்பது மிகவும் வலிமையானது. அமைதி என்பது பல செய்திகளை உள்ளடக்கியது( Silence as means of communication). அமைதி என்பது வலிமையானது( Silence is a powerful tool)…..


மத்தேயு நற்செய்தியாளர் இயேசுவின் சிலுவை மரணத்தை விளக்கும்போது, அவருக்கு அறிமுகமானவர்கள் தூரத்தில் நின்று கொண்டிருந்தார்கள். இந்த காட்சியை பார்க்கும்படி வந்தவர்கள் தங்கள் மார்பிலே அடித்துக் கொண்டு போனார்கள் என்று குறிப்பிடுகிறார்….


இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணத்தில், சுற்றிலும் நின்று கொண்டிருந்த அதிகாரிகள், போர் சேவகர்கள் மத்தியில் ஒரு கூட்ட பெண்கள் அந்த அநீதியை எதிர்த்து போராட முடியாவிட்டாலும் தங்கள் உடல் மொழிகளால் (கண்ணீர், விசும்பல், பெருமூச்சு, புலம்பல்..) தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தார்கள்……
அவர்களின் பேச்சற்ற நிலையும், உடல் மொழிகளும் பெண்களின் வலியையும், கைவிடப்பட்ட நிலையையும், எதிர்கால அச்சத்தையும் கொண்டிருந்தாலும், அச்சத்தின் மத்தியிலும் துணிந்து நிற்கும் வலிமையையும், ஆற்றலையும், கொலை களத்தில் அதிகாரிகளுக்கு வெளிப்படுத்திக் கொண்டே இருந்தது…..


இயேசு கிறிஸ்துவுக்கு வழங்கப்பட்ட தண்டனை, வன்கொடுமை, சித்திரவதை, அச்சுறுத்தல், அவமானப்படுத்தப்படுதல், ஆடை களைதல், நிர்வாணமாக்குதல் போன்ற அநீதிகளுக்கு,இறைவன் நீதி வழங்குவார் என்ற செய்தியையும் அங்கிருந்து பெண்களின் உடல் மொழி வெளிப்படுத்தியது…..
ஆயுதங்களோடு நின்று கொண்டிருக்கின்ற அடக்கு முறையாளர்கள், வன்முறையாளர்கள், போர் பணியாளர்கள், மத்தியில் ஆயுதங்கள் இன்றி கொலை களத்தில் இயேசு கிறிஸ்துவோடு உடன் இருந்த இவர்களை ” உடல் மொழி இயக்கத்தினர்” (Non verbal activists), போராளிகள் என்று நாம் புதிய சொல்லோடு அவர்களை அழைக்கலாம்….


இதை வேறு வழியில் சொல்வது என்றால், இவர்கள் அமைதியாக நின்றார்களே தவிர தங்கள் மார்பிலே அடித்துக் கொண்டு தங்கள் கண்ணீரை ஆயுதமாக சிந்தி, “இயேசுவுக்கு செய்யப்பட்டது அநீதி, அநியாயம், அக்கிரமம், வன்கொடுமை” என்பதை செய்தியாக மக்களுக்கு எடுத்துச் சொன்னார்கள் இந்த பெண்கள்….
விடுதலைப் பயண நூலில் முட்செடி எரியும் பொழுது அதில் கடவுள் பேசினார். அதில் இஸ்ரவேல் மக்களின் கூக்குரல், அழுகை, பெருமூச்சு (Non verbal communication) என் சன்னதியில் வந்து எட்டினது என்கின்றார். அழுகை என்பது மொழி சாரா ஒரு தொடர்பு . இஸ்ரவேல் மக்களின் உடல் மொழி தொடர்பு, கடவுளை எட்டினது. கடவுள் அதற்கு பதில் தந்தார்…..


காயின் – ஆபேல் சம்பவத்தில், ஆபேலின் ரத்தம் என் சன்னதியில் எட்டினது என்று கடவுள் சொல்லுகின்றார். இங்கும் ஆபேலில் உடல் மொழி தொடர்புகளை, கடவுள் உற்று கவனித்து அதற்கு மறுமொழி தருவதை நாம் நன்கு அறிந்திருக்கின்றோம்….
இயேசுவின் சிலுவை மரணத்தில் இதே தான் நடந்திருக்கிறது. செய்வதறியாது, திகைத்து, பயந்து, அச்சத்தோடு, நடுக்கத்தோடு, இழப்புகளோடு நின்று கொண்டிருந்த பெண்களின் உடல் மொழி தொடர்புகளை குறிப்பாக அவர்களின் அழுகை, விசும்பல், கண்ணீர், பெருமூச்சு, ஏமாற்றம் .. போன்றவைகளை ஆண்டவர் கவனித்து கேட்டு அதற்கு மூன்றாம் நாளில் விடை தந்தார், அதுதான் உயிர்த்தெழுதல்…..
போர்க்களத்தில் துணிந்து நின்று காயமுற்றவர்களையும், மரித்தவர்களையும் சுமந்து செல்லும் “செஞ்சிலுவை சங்கத்திற்கு”(Red Cross Society), முன்னோடிகளாக கொலை களத்தில் இயேசுவோடு நின்றிருந்த பெண்கள் ஒரு அமைதி வழி இயக்கத்தினார்கள்( Silent Activists) இயக்கத்தினர்கள் என்றால் மிகையாகாது…..


இஸ்ரவேலரின் பெருமூச்சுக்கு பதில் தந்த ஆண்டவர் ஆபேலின் ரத்தத்திற்கு விடை தந்த ஆண்டவர் கொலை களத்தில் இயேசுவோடு நின்றிருந்த பெண்களின் பெருமூச்சுகளுக்கும் கண்ணீருக்கும், உடல் மொழிகளுக்கும் தந்த பதில் தான் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பு….


நம்முடைய வார்த்தைகளை (Verbal Communication)மட்டும் கவனிக்கின்ற ஆண்டவர் அல்ல நம்முடைய மொழி சாரா தொடர்புகளையும் (Non Verbal Communication)ஆண்டவர் கவனிக்கின்றார்….


இயேசுவோடு கொலை களத்தில் நின்ற பெண்கள் வெறும் பார்வையாளர்களாக ( Not a Spectators) மட்டுமல்ல அவர்கள் அநீதியை கண்டவர்கள் (Eye Witnesses), இயேசுவுக்கு இளைக்கப்பட்ட அநீதியை தங்கள் மனதில் பதிவு செய்தவர்கள் ( Document Preservers), வெகுஜன மக்களுக்கு அவர்கள் செய்தி தொடர்பாளர்கள்( Communicators), உயிர்த்தெழல் செய்தியில் பங்கேற்பாடுகளாகவும்(Participants), செய்தியாளர்களாகவும் ( News readers, tellers), செய்தி தொடர்பாளர்களாகவும்(News Agents)பணியாற்றினார்கள், கடவுள் அவர்களை பயன்படுத்தினார்….


இயேசு கிறிஸ்துவின் இயக்கத்தில் எத்தனையோ பெண்கள் தங்களை இணைத்துக் கொண்டிருக்கிறார்கள். நேரடியாகவும், மறைமுகமாகவும். அப்படிப்பட்டவர்களை அடையாளம் காண்போம். புதிய வரலாறு பெண்கள் பார்வையில் இருந்து எழுதுவோம்….

3. அணிசேரா இயக்கத்தை வடிவமைத்தார்கள் (Non Alliance Movement).

மாற்கு 15: 37 – 41.

இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணத்தில் தனித்து நின்ற பெண்கள் செய்த காரியங்களில் மிக முக்கியமானது அணிசேரா இயக்கத்தை அவர்கள் உருவாக்கி காட்டினார்கள்….
சிலுவையின் வழியில் இயேசுவோடு வந்த பெண்கள் ஒரு அணிசேரா இயக்கத்தை உருவாக்கினார்கள். முதலில் இயேசுவின் சிலுவையை சுமந்த சிரேனே ஊராகிய சீமோன் அவர்களோடு தன்னை இணைத்துக் கொண்டார்….


அருகில் இருந்த கள்வன் யூத அதிகாரிகளோடு, மற்றவரோடு கொண்டிருந்த உறவை அறுத்துவிட்டு, இந்த அணிசேரா இயக்கத்தோடு தன்னை இணைத்துக் கொள்கின்றார்….
நூற்றுக்கு அதிபதி ஒருவர், மெய்யாலும் இவர தேவகுமாரன் என்று இந்த அணிசேர இயக்கத்தில் தன்னையும் இணைத்துக் கொள்கின்றார்….
இயேசுவை அடக்கம் செய்யும்பொழுது பரிசேயர்களில் ஒருவர் இந்த இயக்கத்தோடு தன்னை நினைத்துக் கொள்கிறார்….


மொத்தத்தில் இயேசுவோடு நின்று கொண்டிருந்த பெண்கள், ஒரு மாபெரும் ” அணிசேரா இயக்கத்தை” (Non Alliance Movement) இயேசுவின் சிலுவை மரணத்தில் கட்டமைத்தார்கள் என்றால் அது மிகையாகாது. கடவுளின் விடுதலைத் திட்டத்தில் மாபெரும் சக்தியாக பெண்கள் உருவெடுத்தார்கள்…..

நிறைவாக

# தமது சாயலாக ஆணையும் பெண்ணையும் கடவுள் படைத்தார் என்று அறிந்திருக்கிற நாம், ஆணாதிக்கத்தின் வேர்களை பிடுங்கி எறிவோம்….

திருச்சபை என்பதே பெண்ணின் (Feminine) அடையாளமாக உருவகப்படுத்தப்பட்டுள்ளது என்பதை கருத்தில் கொண்டு, பெண்மையை போற்றுவோம், பெண் குழந்தைகளை தலைமைத்துவத்தில் உருவாக்குவோம்….

நமது திருச்சபையில் நடக்கின்ற எத்தனையோ ஆன்மீக கூட்டங்களுக்கு ஆண் செய்தியாளர்களை மட்டுமே அழைக்கின்றோம் , அந்த வாய்ப்பு பெண் செய்தியாளர்களுக்கு ஏன் வழங்கப்படுவதில்லை என்பதை கேள்வி எழுப்புவோம்….

கடவுளின் விடுதலை திட்டத்தில், கடவுள் எவ்வாறு செயல்படுகின்றார், யாரை பயன்படுத்துகிறார் என்பதை உணர்ந்து நாமும் நம்மை இணைத்துக் கொள்வோம்….

# இறை ஆட்சி மலர இறைவனின் கருவிகளாக பெண்கள் இருக்கிறார்கள் என்பதை உணர்ந்து..” கரங்களை இணைப்போம் ..கருத்தில் இணைவோம்… கடவுளின் ஆட்சியை அமைப்போம்”

கடவுளின் ஆசி உங்களோடு இருப்பதாக…

அருட்பணியில்

இறைப்பணியில் உங்களோடு

Rev. Augusty Gnana Gandhi,

CSI Trichy Tanjore Diocese.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *