திருப்பாடல் 124 – (புதிய) இஸ்ரயேலை பாதுகாப்பவர்

நூற்று இருபத்து நான்காம் திருப்பாடல் சீயோன் திருப்பயணத் திருப்பாடல்களுள் ஒன்றாகும். இத்திருப்பாடல் ஆமானின் சதித்திட்டத்திலிருந்து மொர்த்தேகாய் மற்றும் யூதர்களுக்கு ஆண்டவர் அளித்த விடுதலையை முன்னிட்டு யூதர்கள் கொண்டாடிய பூரீம் பண்டிகைக் கொண்டாட்டத்தின் போது பாடப்பட்ட பாடல் ஆகும். இது மனமகிழ்ச்சி நிறைந்த பாடல் வரிகளைக் கொண்ட கீர்த்தனை ஆகும். மேலும், இனவெறியர்களின் அழிவின் கைகளினின்று விடுதலை அளித்த ஆண்டவருக்கு நன்றி செலுத்தும் நன்றிப்பாடலாக இடம்பெற்றுள்ளது. 

பாபிலோனிய சிறையிருப்பினின்று ஆண்டவர் அளித்த விடுதலையின் தூண்டுதலுடன் இப்பாடலை ஆக்கியோன் இயற்றிப் பாடியுள்ளார். இத்திருப்பாடலின் அமைப்பானது ஒரு குறிப்பிட்ட தாளத்தின் பலன்விளைவு உடையதாக உள்ளது. அதாவது இத்திருப்பாடல் ஏறுவரிசைத் (ஆரோகணம்) தன்மையுடைய சொற்றொடர்களை உடையதாய் கவிகள் அமைக்கப்பட்டுள்ளன.

முதலாம் கவியில் “இப்பொழுது இஸ்ரயேல் மக்கள் சொல்வார்களாக” என்ற சொற்றொடர் இடம்பெற்றுள்ளது. வரலாற்று அடிப்படையில் இத்திருப்பாடல் இஸ்ரயேலரின் விடுதலையைக் குறிக்கும் பாடல் என்ற உண்மையை வலிமையாய் உணர்த்துகிறது. எதை சொல்ல வேண்டும்? என்ற வினாவிற்கான விடை என்பது இத்திருப்பாடல் முதல் ஐந்து கவிகளில் சொல்லப்பட்டுள்ளன. இஸ்ரயேலரின் விடுதலையின் பாடல் என்ற சிந்தனை இதில் உள்ளதால் விடுதலை அடைந்த எந்த குமுகாயமும் தாம் அடைந்த விடுதலையின் அடையாளமாக நன்றிப்பாடலாகப் பாடத்தக்க ஒரு விடுதலையின் பாடலாக உள்ளது என்பது நாம் அறிய வேண்டிய ஒன்றாகும். மேலும், நாம் யாதொரு அடிமைத்தனத்தினின்றும் ஆண்டவரால் விடுதலைப் பெற்றுக்கொள்ளுகின்ற போது நன்றியறிதலோடு ஆண்டவருக்கு நன்றிப்பா இயற்றி பாடுதல் என்பது ஏற்புடையதும் நீதியுடையதும் ஆகும். 

மேலும், இனவெறியினாலும் சாதிவெறியினாலும், ஆணாதிக்க வெறியினாலும், சமய காழ்ப்புணர்ச்சியினாலும் ஒடுக்கப்படுகின்ற போது விடுதலை அளிக்கின்ற ஆண்டவர் என்ற நம்பிக்கையின் இத்திருப்பாடலில் உள்ளடக்கமாக உள்ளது. 

மூன்றாம் கவியில் ஆங்கில மொழிப்பெயர்ப்பில் “விரைவாக” என்ற சொல் இடம்பெற்றுள்ளது. அசீரியாவும் பாபிலோனியாவும் பிற நாடுகளை தங்கள் இராணுவத்தால் அழித்துப் போட்டது. இப்படியிருக்க ஆண்டவர்  நம் சார்பாக இருந்திராவிட்டால் நம்மை அதுபோல நம் எதிரிகள் விரைவாக உயிரோடு விழுங்கியிருப்பார்கள் என்ற சிந்தனையை வரலாற்று பின்னணி பார்வையோடு கூட  இத்திருப்பாடல் இயற்றப்பட்டுள்ளது. 

நான்காம் கவியில் “பெருவெள்ளம்” என்ற சொல் இடம்பெறுகிறது. மிகவும் வேகமான அழுத்தம் நிறைந்த வெள்ளப்பெருக்கு என்பதனைக் குறிக்கிறது. பாலஸ்தீன நாட்டில் குளிர்கால பெருவெள்ளம் என்பது நன்கறியப்பட்ட ஒன்றாகும். “நம்மீது” என்ற சொல்லானது அரசர் யாக்கோபு 1611 மொழிப்பெயர்ப்பில் “ஆன்மாவின் மீது” என்று மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளது. இங்கு ஆன்மா என்பது இஸ்ரயேல் நாட்டைக் குறிக்கும் சொல் ஆகும். ஆக நாட்டின் நலனே இஸ்ரயேல் மக்களுக்கு ஆன்மாவாகவும் ஆன்மாவின் எதிர்நோக்காகவும் இருந்துள்ளது. 

நாம் வாழும் இந்திய பல்சமய சூழலில் நாட்டுப்பற்று என்பது ஒரு குறிப்பிட்ட சமயத்தினருக்கு மட்டுமே உள்ளது போல் சித்தரிக்கப்பட்டு வருகிறது. அது சில ஒரு சமயப்பிரிவினைவாதிகளின் சூழ்ச்சி செயல் என்பது சமயநல்லிணக்கம் போற்றும் அனைத்து மக்களும் அறிந்த ஒன்றாகும். மொழியின் பெயராலும், இனத்தின் பெயராலும் அரசியல் செய்யும் பிரிவினைவாதிகளை அடையாளம் கண்டுகொண்டு அவற்றைக் களைய வேண்டும்.

சாதியாலும், சமயத்தாலும் பிரித்தாளும் நோக்குடன் மக்களுக்குள் சகோதர-சமய நல்லிணக்கத்தைக் கெடுக்கின்ற அரசியல் குழுக்களைக் குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும். மக்களை பிரித்தாளும் அனைத்து உள்நாட்டு தீயசக்திகளை முதலாவது அகற்றிட நாம் இந்த சமூகத்தைக் கற்பிக்க அழைக்கப்படுகிறோம். இவற்றை செய்து நிறைவேற்றி பிறநாடுகள் நம் நாட்டின் மீது காலனியாதிக்கம் செய்யாத படி கவனமாய் நம் நாட்டைப் பாதுகாக்கத் தக்க நல்ல ஆட்சியாளர்களை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும். இவற்றையெல்லாம் நாம் செய்கின்ற போது அனைத்து மக்களுக்குமான சமத்துவம், சகோதரத்துவம், சமூகநீதி நிலைநாட்டப்படும். இத்தகைய விடுதலை சிந்தனைகள் வளர்த்தெடுக்கப்பட்டால் எதிரி நாடுகள் நம் நாட்டின் மீது படையெடுக்கவோ காலனியாதிக்கம் செலுத்தவோ முடியாது. இந்தவிதமான சூழல் உருவாகும் போது உண்மையான விடுதலையின் பாடல் நம்முள் ஊற்றாய் புறப்பட்டு வெள்ளமாய் பாய்ந்தோடி நாடு முழுவதும் சமத்துவம், சகோதரத்துவம், சமூகநீதி எனும் மகிழ்ச்சி பெருங்கடலில் நீந்தி மகிழச் செய்ய ஆண்டவர் வல்லவராய் இருக்கிறார். இந்த சிந்தனைகளின் வழியாய் நாட்டுப்பற்றினை அணிந்துகொள்வோம். 

எல்லாம் வல்ல இறைவர் நமக்கு அருளும் ஆற்றலும் அமைதியும் தந்து ஆசீர்வதித்து காப்பாராக. 

மறைத்திரு. டால்ட்டன் மனாசே
ஆற்காடு லுத்தரன் திருச்சபை