“YOUTH IN A SEARCH OF MEANINGFUL LIFE”
#. திருமறை பகுதிகள்
ஆதியாகமம் 39 : 1 – 11
எபிரேயர் 12 : 1 – 11
யோவான் 1 : 43 – 51
# உட்புகுமுன்..
# “CITIZENS” என்று அழைக்கப்பட்டு வந்த காலம் மாறி, இப்பொழுது நவீன உலகில், தகவல் தொழில்நுட்ப புரட்சியின் விளைவாக “NETIZENS” எனும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறோம்…
# அன்றைய தேடல் என்பது அன்று நம்மை பல நாட்டிற்கு அழைத்துச் சென்றது. பல புத்தகங்களைத் தேடி வாசிக்க செய்தது. பல நல்ல மனிதர்களை சந்திப்பதற்கு வழி நடத்தினது. பல சாதனையாளர்களோடு கைகோர்க்க துணை செய்தது. சாதிக்க வேண்டும் என்ற லட்சியத்தை இளைஞர்களிடையே விதைத்தது….
# இன்றைய தேடல் என்பது இருக்கும் இடத்திலிருந்து கணினி மூலம் எல்லாவற்றையும் தேடலாம், எல்லாம் கிடைக்கும், எதையும் பெறலாம், எப்படி ஆயினும் சாதிக்கலாம், குறுகிய காலத்தில் உயரலாம், தொலைதூரத்தில் இருக்கும் உலகை நம் அறைக்குள் கொண்டு வந்து விட முடியும் என்ற நிலைக்கு உலகம் சுருங்கி இருக்கிறது ( Shrinking the World).
# உலகம் (World) என்று சொல்லிக் கொண்டிருந்த நாம் இன்று டிஜிட்டல் வேர்ல்ட் (Digital World) என்று சொல்லப்படும் நிலைக்கு நாம் மாறி இருக்கின்றோம். இளைஞர்கள் இந்த உலகத்தில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்…
# ஒருபுறம் விஞ்ஞான வளர்ச்சி (Development of Science), தொழில்நுட்ப வளர்ச்சி (Technological Development), அறிவியல் கண்டுபிடிப்புகள் (Scientific Discoveries), உலகை விரல் நுனியில்(Finger Tip) வைத்துள்ளது…
# இன்றைய ஊடகங்கள் (Media) மற்றும் விளம்பரங்கள்(Advertisements) இளைஞர்களையே குறிவைக்கின்றது. நுகர்வு கலாச்சாரத்திற்கு (Consumerism) இட்டுச் செல்கிறது. கடன் சுமைக்குள் (Debters) தள்ளுகிறது, வேகமான கலாச்சாரத்திற்கு (Speedy Culture) மாற்றியுள்ளது. உணவு (Fast Food), சோகுசு வாகனங்கள் ( Luxurious Vehicles), பணப்பெருக்கம் (Share Marketing), பதுக்கல்( Accumulation), சமையல் முறைகள் (Instant), நொடியில் உலகை அடைதல்(Wireless Connection), அடிமை ஆகுதல்( Adictions), கதாநாயக மனப்பான்மை (Heroism) போன்ற பல காரணிகளுக்கு அது வழிவகை செய்து வருகிறது…
# சமயங்கள் சாரங்களை இழந்து விட்டதாலும், சமயத் தலைவர்கள் பக்தி நெறியை மறந்து விட்டதாலும், அரசியல் சாக்கடையாக உருமாறி விட்டதாலும், ஆன்மீகம் அரசியலாகி விட்டதாலும், வழிபாட்டுத் தலங்கள் சந்தை பொருளாதாரமயமாகிவிட்டதாலும், பண்டிகைகள் வெறும் கொண்டாட்டங்களாக மாறிவிட்டதாலும், கூட்டுக் குடும்பங்கள் சிதைந்து விட்டதாலும், தனி மனித நல்லொழுக்கங்கள் அழிந்து வருவதாலும், நல்ல முன்மாதிரிகள் கவனிக்கபடாததாலும் இன்றைய இளைஞர்களின் வாழ்வு கேள்விக்குறியாக மாறி வருகிறது…
# இன்றைய இளைஞர்கள் நாளைய தலைவர்கள் என்பதை மாற்றி, அவர்கள் இன்றைய தலைவர்கள், நம்பிக்கைகள், சரித்திரங்கள், போராளிகள், பகுத்தறிவாதிகள், செயல்பாட்டாளர்கள், பண்பாட்டாளர்கள், சமூக சிற்பிகள், சமூக ஆர்வலர்கள், சமய நல்லிணக்க வாதிகள், முன்மாதிரிகள் என்ற கருத்தியலில் இளைஞர்களை உருவாக்க முன்வரவேண்டும்.
# வாழ்வின் அர்த்தங்களை நோக்கிய தேடலில் என்றும் இளைஞர்கள் இயங்கிக் கொண்டே இருக்கிறார்கள், பலர் இயக்கிக் கொண்டிருக்கிறார்கள், பலர் முன் உதாரணமாக இருக்கின்றார்கள், பலர் படிக்கட்டுகளாக, ஏணிப்படிகளாக இருந்து வருகிறார்கள்….
இள”மை”
என்னும்
“மை”
கொண்டு
உலகில்
அடி”மை”யை நீக்கலாம்
நேர்”மை”யை கொணரலாம்
உரி”மை”யை தரலாம்
மட”மை”யை நீக்கலாம்
இல்லா”மை”யை உருவாக்கலாம்
கல்லா”மை”யை அகற்றலாம்
கொடு”மை”யை விரட்டலாம்
தீ”மை”யை ஒழிக்கலாம்
பெண்”மை”யை போற்றலாம்
தூய்”மை”யை பேணலாம்
பெரு”மை”யை அழிக்கலாம்
வறு”மை”யை விரட்டலாம்
இறை”மை”யை வெளிப்படுத்தலாம்….
இன்றைய திருமறை காட்டும் இளையோர்கள் வாழ்வில் “வாழ்வின் அர்த்தங்களை நோக்கிய தேடலை” இனம் கண்டு கொள்வோம், கற்றுக் கொள்வோம், அவற்றில் தடம் பதித்து நடப்போம்…
1. இளையோர்களின் தேடல் – உயர்ந்த இலட்சியங்களை அடைய செய்யும்…. (ஆதியாகமம் 39 : 1 – 11)
யோசேப்பின் சரித்திரம் இளையோர் வாழ்வுக்கான ஒரு அடித்தளம். அவரின் வாழ்வு முறை இன்றைய இளைஞர்களுக்கான ஒரு அறைகூவல். அவரின் பக்தி வாழ்வு இன்றைய திருச்சபைக்கு ஒரு பாடம்…..
யோசப்பின் வரலாறை மூன்று காலகட்டங்களாக பிரிக்கலாம். ஒன்று தன் வீட்டில் வாழ்ந்த காலங்கள். இரண்டாவது அடிமையாக விற்கப்பட்டு அரண்மனையில் சேர்ந்த காலம். மூன்றாவது பெற்றோர்கள் மற்றும் உடன்பிறப்புகளோடு வாழ்ந்த காலம்….
யோசேப்பின் இரண்டாவது காலம் இளமையின் காலம். அவரிடம் அழகும் – திறனும் ஒன்றாக இணைந்திருந்தது. அறிவும் – புத்தி கூர்மையும் நிறைந்திருந்தது. இறைப்பற்றும் – இறை அச்சமும் பிரிக்க முடியாதிருந்தது. நேர்மையும் – நீதியும் அவரில் கலந்திருந்தது. இலட்சியங்களும் – விடா முயற்சியும் இணைந்து பயணித்தன. ஒழுக்கமும் – நன்னடத்தையும் நன்றாகவே இருந்தன…
அடிமையாக தன் வாழ்வை துவங்கினவர், அகதியாகப எகிப்தில் அடைக்கலம் புகுந்தவர் பின்னர் படிப்படியாக உயர்ந்து அரண்மனை அதிகாரியாய் வலம் வந்தவர். நாட்டின் வளர்ச்சியில் பெரிதும் பங்கெடுத்தவர். தனக்கு வாழ்வு தந்த அரண்மனைக்கும், நாட்டிற்கும், கடவுளுக்கும் உண்மையோடு வாழ்ந்தவர்….
வருமுன் காப்போம் என்ற தொலைநோக்கு பார்வையோடு, பஞ்சத்திலிருந்து நாட்டை விடுவித்தவர், ஏழைகளை காப்பாற்றியவர். மக்கள் நலமோடு, வளமோடு வாழ்வதற்கு வித்திட்டவர் யோசேப்பு எனும் இளைஞர்…
தனது அதிகாரத்தை நாட்டின் வளர்ச்சிக்கும், நாட்டு மக்களின் நலனுக்கும், முன்னேற்றத்திற்கும் பயன்படுத்திய ஒரு முற்போக்கான இளைஞர் இந்த யோசேப்பு…
தனது இளமைப் பருவத்தில் இருந்த அழகினை ஒருபோதும் தன் சுயநலனுக்காக, ஆணாதிக்கத்திற்காக, பெண் அடிமைத்தனத்திற்காக, தன் இச்சைகளை நிறைவேற்றுவதற்காக பயன்படுத்தாத உத்தம இளைஞர் இந்த யோசேப்பு….
சுய ஒழுக்கமும் – சுயக் கட்டுப்பாடும் அவரது வாழ்வுக்கு மேலும் அர்த்தம் சேர்த்ததாக அமைந்திருந்தது. எந்த சூழ்நிலையிலும் இதை ஒருபோதும் விட்டுக் கொடுக்காத மனப்பான்மையோடு வாழ்ந்தவர் இந்த இளைஞர் யோசேப்பு….
அரண்மனை வாழ்வு சுகபோக வாழ்வாக இருந்தாலும், எல்லா உரிமைகளும் தனக்கு கிடைத்திருந்தாலும், அதிகாரத்தில் உச்சத்தில் இருந்தாலும் அவைகளை எல்லாம் புறந்தள்ளி அர்த்தமுள்ள வாழ்வு எப்படி வாழ்வது என்பதை வாழ்ந்து காட்டியவர் இந்த இளைஞர் யோசேப்பு…
நீதியினிமித்தம் சிறை சென்றாலும் கவலை இல்லை, அச்சமும் இல்லை என்று துணிச்சலோடு சிறை வாழ்வை, பாடுகளை,, துன்பங்களை, சித்தரவதைகளை, அவமானங்களை, சந்தித்தவர் இந்த இளைஞர் யோசேப்பு….
சிறை வாழ்விலும் கூட நிதானத்தோடும், சகிப்புத் தன்மையோடும், தன் திறன்களை, கடவுள் தந்த அறிவாற்றலை ஆக்கப்பூர்வமான வழிமுறைகளுக்கு பயன்படுத்தியவர் இந்த இளைஞர் யோசேப்பு…
பழிவாங்குவது அல்லது மன்னித்து அன்பு செய்வது இந்த இரண்டில் அன்பு செய்வதை தன் வாழ்வின் தேடலாகவே நடைமுறைப்படுத்தியவர் இந்த இளைஞர் யோசேப்பு…
யோசேப்பின் இந்த அணுகுமுறைகள் அடிமை எனும் நிலையிலிருந்து, அகதி என்னும் நிலையில் இருந்து, புலம்பெயர்ந்தவர் என்ற நிலையில் இருந்து படிப்படியாய் அவரை உயர்த்தி அரண்மனை அதிகாரியாய், அரசரின் பாதுகாவலராய், ஆலோசகராய் உயரத்தில் அவரை எடுத்துச் சென்றது….
யோசேப்பு எனும் இளைஞரின் பக்தி, வாழ்வு, இறைப்பற்று, இறையச்சம், முன்மதி, நன்னடத்தை, அறிவுத்திறன் போன்றவை யோசேப்பின் வாழ்வில் உயர்ந்த லட்சியங்களை “இளமையிலேயே” அடையும் படி செய்தது….
இறைவன் நம்மை காண்கின்றார், இறைவன் நம்மை வழி நடத்துகின்றார், இறைவன் நம்மை பயன்படுத்துகின்றார், இறைவனுக்கு சான்றாக வாழ வேண்டும் என்ற இளைஞர் யோசேப்பின் தேடல் அவரின் உயர்ந்த லட்சியங்களை எளிதாக அடைவதற்கு பாலமாக அமைந்தது….
வாழ்வில் உயர்ந்த இலட்சியங்களை அடைவதற்கு பலர் பல்வேறு வகைகளில் முயற்சிக்கும் பொழுது, யோசேப்பு எனும் இளைஞர், இப்படித்தான் வாழ வேண்டும் என்ற வாழ்க்கைக்கு ஒரு முன்மாதிரியான இலக்கணத்தை வகுத்துக் கொடுத்துள்ளார். தொடர்ந்து அவ்வழியில் பயணிப்போம்….
2. இளையோர்களின் தேடல் – உன்னதர் இயேசுவில் இணையச் செய்யும்… (யோவான் 1 : 43 – 51)
இயேசு கிறிஸ்து திருமுழுக்கு பெற்ற பின்பதாக தனது திருப்பணியை உடனடியாக அவர் துவங்குகின்றார். இறை ஆட்சி என்னும் உயர்ந்த இலக்கினை அடைவதற்கு முனைப்போடு இயேசு கிறிஸ்து செயல்படுகின்றார்…
முப்பது வயது வாலிபர் ஆகிய இயேசு இளமைப் பருவத்தில் தன் இளமை காலங்களை இறைவனின் ஆட்சியை இந்த மண்ணில் நிறுவ வேண்டும் எனபதற்காகவே செலவு செய்கின்றார்…
இறைவனின் ஆட்சியை அமைக்கும் திட்டத்தில் ஒரு இளைஞர் கூட்டமைப்பை நிறுவ வேண்டும் என்று திட்டமிட்டு, இளைஞர்களை தன் திருப்பணிக்கு என்று தன் உடன் பணியாளர்களாக தெரிவு செய்கின்றார்….
இயேசுவால் தெரிவு செய்யப்பட்ட சீடர்கள் பெரும்பாலும் இளையோரே. அவர்கள் அனைவரும் அன்றாட கூலிகள், கடின உழைப்பாளிகள், விளிம்பு நிலையில் இருந்தவர்கள் என்று புரிந்து கொள்ளலாம்…
இயேசுவின் இந்த இயக்கத்தில் இணைந்த இளைஞர்கள் பலர் இயேசுவால் அழைக்கப்பட்டவர்கள். ஒரு சிலர் தாமாக அவரோடு இணைந்து கொண்டவர்கள்…
இளைஞர் இயேசுவின் சிந்தை, சமூகத்தின் மேல் கொண்ட அக்கறை, ஏழைகள் மீது கொண்டிருந்த கரிசனை, அநீதிகளுக்கு எதிரான அவரின் செயல்பாடுகள், சமயங்களின் மீது அவர் கொண்டிருந்த ஈடுபாடு, சகோதரத்துவம், சீர்திருத்த சிந்தனைகள் போன்றவை அன்றைய இளைஞர்களை இயேசுவின்பால் ஈர்த்தது…
யோவான் அவர்கள் இளைஞர் இயேசுவை “தேவ ஆட்டுக்குட்டி” என்று அறிமுகப்படுத்தின பின்பதாக அந்த சீடர்கள் இயேசுவை பின்தொடர்கின்றார்கள். அவரை “ரபி” என்று பெயர் சொல்லி அழைக்கின்றார்கள். இயேசுவின் வாழ்க்கை முறையை காண விரும்புகிறார்கள். இயேசு அதை அனுமதிக்கின்றார். அவர்களை அன்று இரவு தம்மோடு தங்கும்படியாக அனுமதி அளிக்கின்றார் அவர்களும் அவரோடு தங்குகின்றார்கள்…
அந்த இரவில் அவர்கள் என்ன பேசினார்கள் என்று தெரியவில்லை, என்ன உரையாடினார்கள் என்றும் தெரியவில்லை, எதை குறித்து பேசினார்கள் என்றும் அறிந்து கொள்ள முடியவில்லை ஆனால் அவர்கள் இருந்த இடமும், அன்றைய இரவு பொழுதும் அவர்களிடையே ஒரு உறவை, ஒரு நெருக்கத்தை, ஒரு கருத்தொற்றுமையை உண்டாக்கியிருந்தது என்பதை உணர முடிகிறது….
விடிந்த பின்பு இரண்டு சீடர்களிடையே ஒரு புதிய விடியல் உண்டாகிறது. அவரோடு தங்கியிருந்த அந்திரேயா என்பவர் தன் சகோதரனிடம் நாங்கள் மேசியாவை கண்டோம் என்று சாட்சி பகிர்கின்றார். மேசியா வர இருக்கிறார் என்று யூதர்கள் நம்பி இருந்த வேளையில், அந்திரேயா மேசியா வந்துவிட்டார், மேசியா யுகம் துவங்கிவிட்டது என்பதை பறைசாற்றுகின்றார்….
அந்திரேயா, இளைஞர் இயேசுவை சந்தித்த தன் முதல் அனுபவத்திலேயே, இயேசு கிறிஸ்துவில் மேசியாவின் செயல்பாடுகளும், மேசியா யுகமும் உலகில் துவங்கி விட்டது என்பதை உணர்ந்து கொண்டு அதை முதன் முதலில் உலகிற்கு எடுத்துச் சொன்னவர் இந்த அந்திரேயா எனும் இளைஞர்…
மறுநாளில் இயேசு கிறிஸ்து சீமோன் என்னும் இளைஞருக்கு பேதுரு என்னும் புதிய பெயர் வைத்து, அவரையும் தன்னோடு அழைத்துக் கொள்கிறார். இயேசுவின் கருத்தொற்றுமையில், கருத்தியலில் கவரப்பட்டு இளைஞர்கள் கூட்டமைப்பு ஒன்று மெல்ல மெல்ல உருவாகின்றது…
பிலிப்பு என்னும் இளைஞரை இயேசு கிறிஸ்து தம் சீடராக அழைக்கின்றார், அவரும் தன்னை இணைத்துக் கொள்கின்றார். அந்த பிலிப்பு, நாத்தான்வேல் என்பவரிடம் இயேசுவை அறிமுகப்படுத்துகிறார்…
பிலிப்பு நாத்தான்வேலைக் கண்டு, நியாயப்பிரமாணத்திலே மோசேயும், தீர்க்கதரிசிகளும் எழுதியிருக்கிறவரைக் கண்டோம்: அவர் யோசேப்பின் குமாரனும் நாசரேத்தூரானுமாகிய இயேசுவே என்றான்….
அதற்கு நாத்தான்வேல் “நாசரேத்திலிருந்து யாதொரு நன்மை உண்டாகக்கூடுமா?” என்று நாசரேத்து ஊரைப் பற்றிய மக்களின் புரிந்து கொள்ளுதலையும், எவ்வளவு இழிவாக கருதப்பட்டதையும் வெளிப்படையாக கூறுகின்றார்…..
நாசரேத்தூரானாகிய இயேசு எப்படி மாற்றங்களை கொண்டு வர முடியும், என்று வினவுகிறார், அதற்குப் பிலிப்பு வந்து பார் என்றான்….
நாத்தான்வேல் இயேசுவிடம் வரும் பொழுது “இதோ கபடற்ற உத்தம இஸ்ரவேலன்” என்று அவரை பெயரிட்டு, உரிமையோடு, மாண்போடு இயேசு அவரை அழைக்கின்றார்….
உமக்கு என்னை எப்படி தெரியும் என்று நாத்தான்வேல் கேட்கும் பொழுது, நீ அத்தி மரத்தின் கீழ் நிற்கும் பொழுது நான் உன்னை தெரிந்து கொண்டேன் என்று அவரை அறிந்தவராக இயேசு அவருக்கு பதில் உரைக்கின்றார்….
அவர்கள் இருவரின் உரையாடலின் இறுதியில் நாத்தான்வேல், இயேசுவை நீர் இஸ்ரவேலின் ராஜா என்று சொல்வதோடு நிறுத்திக் கொள்ளாமல், இறைவனிடத்திலிருந்து வந்த “இறைமகன்” என்று உலகிற்கு இயேசுவை அறிமுகப்படுத்தும் முதல் சாட்சியாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார்….
நாசரேத் ஊர் அன்று புறக்கணிக்கப்பட்டிருந்தாலும், இழிவாக கருதப்பட்டிருந்தாலும், அங்கு வாழ்கின்ற மக்கள் மக்களாகவே மதிக்கப்படாமல் இருந்தாலும் நாத்தான்வேல் “நாசரேத்தூராராகிய இயேசுவை” தன் குருவாக, லட்சிய மனிதராக மனமுவந்து ஏற்றுக் கொண்டார்….
நாத்தான்வேல் அவர்களின் தேடல் மனித மதிப்பீடுகளை தாண்டி, தூய்மை – தீட்டு என்ற கருத்துகளை புறந்தள்ளி, வாழும் இடங்களை மையப்படுத்திய இழிநிலையை எதிர்த்து இயேசுவோடு உறவு கொள்ள வழிவகை செய்தது, உடன் பணியாற்ற வாய்ப்புகளை உருவாக்கியது….
இயேசு கிறிஸ்து என்னும் இளைஞரின் தேடல் நாசரேத்தூரானாகிய இயேசு என்று தன்னை இழிவாக கருதியவரையும் உயர்ந்த மனப்பான்மையோடு, உயர்ந்த சொல்லாடலோடு, உயர்ந்த உள்ளத்தோடு அவரோடு இணைந்து பணியாற்ற வழிவகை செய்தது…..
நாத்தான்வேல் எனும் அந்த இளைஞரின் தேடல் இயேசுவின் இயக்கத்தோடு தன்னை இணைத்துக் கொள்ளவும, இயேசுவோடு இணைந்து உடன் திருப்பணி ஆற்றவும், இயேசுவின் பாடுகளில் பங்கெடுக்கவும், இறைவனின் ஆட்சி அமைந்திட போராடவும் அது உதவி செய்தது….
இளைஞர் இயேசுவின் இயக்கத்தில் இணைந்த இளையோர்கள் (சீடர்கள்) தங்கள் கனவுகளை மறந்தார்கள், சுயநலன்களை வெறுத்தார்கள், உலக சிற்றின்ப ஆசைகளை துறந்தார்கள்….
இயேசுவோடு தங்களை இணைத்துக் கொண்ட அன்றைய இளைஞர்கள்( சீடர்கள்) “சமூக நீதிக்காக ஏங்கினவர்கள், சமயங்களிலே மறுமலர்ச்சி உண்டாகும் என்று எதிர்பார்த்து இருந்தவர்கள், மேசியா யுகத்திற்காக காத்திருந்தவர்கள், அரசியலில் மாற்றம் வரும் என்று நம்பிக்கையோடு இருந்தவர்கள், அநீதிகளை எதிர்ப்பதற்கு தலைமைத்துவத்தை உருவாக்க முயன்றவர்கள்…..
அவர்களின் தேடல் இளைஞர் இயேசுவோடு தங்களை இணைத்துக் கொள்வதற்கு வழிவகை செய்தது. இயேசு உருவாக்கிய அந்த மாபெரும் இயக்கம் முன்னேறி செல்வதற்கு முன்கள பணியாளர்களாக அவர்களை உருமாற்றியது….
இளைஞர் இயேசு கிறிஸ்துவின் தேடலும் இளையோர்களின் கூட்டமைப்பான சீடர்களின் தேடலும் இணைந்து இறை ஆட்சியை நோக்கி பயணித்தது….
அன்றைய இளைஞர்களின் தேடல் உன்னதர் இயேசுவோடு இணைவதற்கு வழி செய்தது, இறை ஆட்சிக்கான புது வழித்தடங்களை உண்டாக்கியது. புதிய பாதையில் பயணிக்க உதவியது. மாற்றங்களை சமூகத்தில் கொண்டு வந்தது. மனிதம் மண்ணில் மலர்வதற்கு புரட்சியை உண்டாக்கியது…
3. இளையோர்களின் தேடல் – உயர்ந்த பண்புகளை உலகிற்கு காட்டும்… (எபிரேயர் 12 : 1 – 11)
திருத்தூதுவராகிய பவுல் எபிரேய திருச்சபைக்கு எழுதுகின்ற கடிதத்தில், முதலாம் அத்தியாயத்தில் முன்னோர்கள் எதனால் அவர்கள் நற்சாட்சி பெற்றார்கள் என்று கேள்வி எழுப்பி அதற்கான விடையும் தருகின்றார்….
விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும் காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது. அதினாலே முன்னோர்கள் நற்சாட்சிபெற்றார்கள்.(எபிரேயர் 11 : 1, 2) என்று முன்னோர்களினுடைய சான்றான வாழ்க்கையை எடுத்துக்காட்டுகின்றார் …
யார் அந்த சான்றோர்கள் என்று பதினோராம் அதிகாரத்தில் மிக நீண்ட பட்டியலை திருத்தூதுவர் பவுல் தன் திருச்சபைக்கு மேற்கோள் காட்டுகின்றார்…
அதில், ஆபேல் துவங்கி தாவீது, சிம்சோன், கிதியோன் …போன்ற பல விசுவாசிகளின் வாழ்வுதனை தன் திருச்சபைக்கு எடுத்துக்காட்டுகின்றார்…
சிலர் நிந்தைகளையும், அடிகளையும், கட்டுகளையும், காவலையும் அநுபவித்தார்கள். கல்லெறியுண்டார்கள், வாளால் அறுப்புண்டார்கள், பரீட்சைபார்க்கப்பட்டார்கள், பட்டயத்தினாலே வெட்டப்பட்டு மரித்தார்கள், செம்மறியாட்டுத் தோல்களையும் வெள்ளாட்டுத்தோல்களையும் போர்த்துக்கொண்டு திரிந்து, குறைவையும் உபத்திரவத்தையும் துன்பத்தையும் அநுபவித்தார்கள். (11 : 35 – 37)..
இவர்களெல்லாரும் விசுவாசத்தினாலே நற்சாட்சிபெற்றும். வாக்குத்தத்தம்பண்ணப்பட்டதை அடையாமற்போனார்கள்.( 11 : 39) என்று தன் திருச்சபைக்கு இஸ்ரவேலரின் வரலாற்றை நினைவூட்டுகின்றார்…
இளம் திருச்சபை தனக்கான தேடலில், இவைகளை எல்லாம் கருத்தில் கொண்டு அழைக்கப்பட்ட அழைப்புக்கு பாத்திரமாகவும், உண்மையாகவும் , இயேசுவின் அடிச்சுவட்டில் பயணிக்க வேண்டும் என்று பவுல் வலியுறுத்துகின்றார்…
பன்னிரண்டாம் அத்தியாயத்தில் ஐந்தாம் திரு மொழியில் பவுல் அடியார், தம் திருச்சபையை “என் மகனே” என்று உரிமையோடு அழைக்கின்றார். தன் திருச்சபையை இளம் பிராயத்தோடு ஒப்பிட்டு, அதற்கு ஆலோசனையும், புத்தி மதியையும் பவுலடியார் வழங்குகின்றார்…
தகப்பன் – பிள்ளைகள் உறவைப் போல, கடவுள் – திருச்சபை என்ற உறவை அழகாக பவுல் உருவகப்படுத்தி இருக்கின்றார். பெற்றோரின் கண்டிப்பு பிள்ளைகளை எவ்வாறு தேடல்களுக்கு வழிவகை செய்கிறதோ, அதேபோல கடவுளின் கண்டிப்பும், தண்டிப்பும், ஆலோசனையும் திருச்சபை தேடல்களில் வழிநடத்தும் என்று பவுல் சுட்டிக்காட்டுகின்றார்…
மேகம் போன்ற திரளான இந்த சாட்சிகள் தங்களுக்கு நலமென்று தோன்றினபடி கொஞ்சக்காலம் சிட்சித்தார்கள். கடவுளோ தம்முடைய பரிசுத்தத்துக்கு நாம் பங்குள்ளவர்களாகும்பொருட்டு நம்முடைய பிரயோஐனத்துக்காகவே நம்மைச் சிட்சிக்கிறார் (12 : 10) என்று தன் திருச்சபைக்கு இறை தேடலின் அவசியத்தை வலியுறுத்துகின்றார்….
எந்தச் சிட்சையும் தற்காலத்தில் சந்தோஷமாய்க் காணாமல் துக்கமாய்க் காணும். ஆகிலும் பிற்காலத்தில் அதில் பழகினவர்களுக்கு அது நீதியாகிய சமாதான பலனைத் தரும்(12 : 11) என்று தன் திருச்சபைக்கு பவுல் வலியுறுத்தி கூறுகின்றார். இறைவனை மறந்து இருந்ததையும், இறை பக்தியில் தவறி இருந்ததையும், சுட்டிக்காட்டி “இளம் திருச்சபையாகிய எபிரேய திருச்சபை ” இறை உறவிலும், இறை பற்றிலும், இறை தேடலிலும் வளர்ந்து பெருக வேண்டும் என்று பவுல் அழுத்தமாக வலியுறுத்தி கூறுகின்றார்….
பவுலடியார் தன் திருச்சபைக்கு கடவுளின் சினம், சிட்ச்சை பற்றி வலியுறுத்துகின்றார். கடவுளின் சினம் தண்டிப்பதற்கு அல்ல மாறாக கண்டிப்பதற்கும், நல்வழிப்படுத்துவதற்கும் வழிநடத்துகிறது. கடவுளின் அன்பு எல்லையற்றது, அந்த அன்பு சகலத்தையும் தாங்கும், சகலத்தையும் சகிக்கும். அதே சமயத்தில் அன்போடு கண்டிக்கவும் செய்யும் என்பதை பவுலடியார் சுட்டிக் காட்டுகிறார். அந்த கண்டிப்பும், தண்டனையும் வாழ்வை அழிப்பதற்கு அல்ல வாழ்வை நெறிப்படுத்துவதற்கும், வாழ்வை வளமாக்குவதற்கும் உதவி செய்யும் என்பதையும் குறிப்பிடுகின்றார்….
இளையோர்கள் சிட்ச்சையை, கண்டிப்பை , ஆலோசனையை பெரும்பாலும் விரும்புவதில்லை ஆனாலும் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் கண்டிப்பும் தண்டனையும் அவர்களை பக்குவப்படுத்துவதற்கும், நெறிப்படுத்துவதற்கும், உயர்ந்த பண்புகளை அடைய வைப்பதற்கும் உதவியாகவே இருக்கின்றன….
இதைப்போலவே கடவுளின் கண்டிப்பு இளையோர்களின் வாழ்வில் தேடலுக்கு வழிவகுக்கும், உயர்ந்த பண்புகளை பெறுவதற்கு அது துணை செய்யும், உயர்ந்த உள்ளத்தோடு வாழ்வதற்கு அது வழி நடத்தும்….
இயேசு இத்தகைய உயர்ந்த உள்ளத்தோடு, பண்போடு இறை மக்களுக்காக தன்னையே தியாக பலியாக ஒப்புக்கொடுத்ததையும் பவுலடியார் அழுத்தமாக வலியுறுத்துகின்றார்…
“கல்வாரி காட்சியை கண்ட பின்னும் நேசியாமல் இருப்பாயா” என்ற பாடலைப் போல, சிலுவை பாடுகள் வழியாக ஆண்டவர் காட்டுகின்ற அந்த அன்பு, நம் வாழ்வில் தாக்கத்தையும், இறைப்பற்றையும், இறை அச்சத்தையும், உயர்ந்த பண்புகளையும் வெளிப்படுத்த விட்டால் நாம் வாழும் வாழ்வு அர்த்தம் இல்லாதது என்பதையும் பவுலடியார் சுட்டிக் காட்டுகின்றார்….
இளையோர்களின் பண்புகள் இறை மகன் இயேசுவின் பண்புகளில் ஒத்திருக்க வேண்டும். இயேசுவைப்போல கண்டித்து உரைக்கும் பண்புகளில் வளர்ந்து இருக்க வேண்டும். இயேசுவைப் போல பாடுபடும் பண்புகளிலும் தன்னை இணைத்து இருக்க வேண்டும்….
இளையோர்களின் இத்தகைய தேடல்கள் திருச்சபைகளில் பிரதிபலிக்க வேண்டும். அந்த திருச்சபை இயேசுவின் அன்பினை உலகிற்கு காட்ட வேண்டும். அந்த அன்பு உலகினை ஆள வேண்டும்…
# நிறைவாக…
# அன்று பட்டிமன்றங்களில் இளையோர்களுக்கான வாய்ப்புகள் அதிகம் இல்லை ஆனால் இன்று அதிகம் பேசுகிறார்கள். இளைய தலைமுறைகளின் பேச்சுக்கள், அவர்களின் தேடல்கள் சமூக மாற்றங்களுக்கு அடித்தளங்களாக அமைகின்றன….
# இன்றைய இளைஞர்களின் தேடல்கள் மென் திரையில் விரிகின்றன, உலகங்கள் அவர்களின் கையடக்கத்திற்குள் வந்து விட்டன. தேடல்களால் மனங்கள் தெளிவுகள் பெறுகின்றன. அந்த தெளிவுகள் வாழ்க்கையின் அர்த்தங்களை விளக்குகின்றன….
# இளையோர்களின் தேடல்களும், அவர்களின் பங்களிப்புகளும், படைப்பாற்றல்களும் சமூகத்தில் பெரிய பங்கு வகிக்கின்றன. சமூகக் கட்டமைப்பில் புதுமைகளை உருவாக்குகின்றன…
# இளம் சிறார்களுக்கு இளையோர்களே ஆசிரியர்கள், நாயகர்கள், நாயகிகள், முன்னோடிகள், ஏணிப்படிகள், லட்சியவாதிகள்… வாழ்ந்து காட்டிடுவோம்….
# இளையோர்களின் தேடல் – உயர்ந்த லட்சியங்களை அடைய வைக்கின்றது, உன்னதர் இயேசவில் இணைய வைக்கின்றது, உயர்ந்த பண்புகளை உலகிற்கு காட்டுகிறது….
# இளையோர்கள் உயர்ந்த பண்புகளை உலகிற்கு வெளிப்படுத்த வேண்டும். அவைகள் அடுத்த தலைமுறைக்கு வழியாக, வாய்க்காலாக அமைந்திட வேண்டும்.
இறைவனின் ஆசி என்றும் உங்களோடு இருப்பதாக….
தேடல்கள் எப்போதும் நம்மோடு இருக்கட்டும். நம் மனமும் இளமையாகவே இருக்கட்டும். இளைஞர் இயேசுவின் தோழமையில் என்றும் உறவில் இருப்போம்…
என்றும் நட்புடன்