stained glass, colorful, men-4573950.jpg

25 ஜனவரி 2024

• திருச்சபை வாழ்வில் பவுல் முக்கியமான ஒரு இடத்தை எடுக்கின்றார். இயேசுவின் நற்செய்தி எருசலேமை மையப்படுத்தியதாக காணப்பட்டபோதிலும் எருசலேமுக்கு வெளியே இயேசுவின் நற்செய்தியை எடுத்துச் சென்றவர் பவுல் அடிகளார் ஆவர். இவர் சிசிலியாவில் உள்ள தரிசு பட்டணத்திலே பிறந்ததாகவும் ஒரு பரிசேயனாகவும் பெஞ்சமீன் கோத்திரத்தை சார்ந்தவராகவும் கமாலியேல் பாதத்தில் இருந்து கற்றவராகவும் பிலிப்பியர் 3:5-7 வரையுள்ள பகுதி எமக்கு போதிக்கின்றது.

• பவுல் ஓர் யூதனாக இருந்தபடியினால், ‘சிலுவையில் அறையப்பட்ட மனிதர் ஓர் சபிக்கப்பட்டவர்’ என்ற சிந்தனை யூதர்கள் மத்தியில் காணப்பட்டது. இதற்கமைய இயேசுவும் ஓர் சபிக்கப்பட்டவராகவே பவுல் பார்க்கின்றார். ஆயினும், கிறிஸ்தவர்கள் இயேசுவை மேசியா என உரிமை பாராட்டியது பவுலுக்கு இருந்த ஓர் பிரச்சினை ஆகும். மேலும், கிறிஸ்தவர்கள் மோசேயின் சட்டம், ஓய்வுநாட் சட்டம் ஆகியவற்றை கடைப்பிடிப்பதில்லை. அத்துடன், யூதர்களால் விலக்கப்பட்டிருந்த வரித்தண்டுபவர்கள், பாவிகள் போன்றவர்களை கிறிஸ்தவர்கள் தமது நண்பர்களாக்கினர். இக்காரணங்களால் கிறிஸ்தவர்களை துன்புறுத்தும் செயற்பாட்டை பவுல் மேற்கொண்டதாக திருத்தூதுவர்பணிகள் 9,22,28 ஆகிய அதிகாரங்கள் பேசுகின்றன.

• பவுல் தனது மனமாற்ற சம்பவத்தைப் பற்றி திருத்தூதுவர்பணிகளில் லூக்கா கூறுவதைப் போன்றல்லாமல் கலாத்தியர் நிருபத்தில் தன் கையெழுத்துக்களால் இந்நிகழ்வை வடிக்கின்றார். இது லூக்கா கூறும் கொடூர தன்மையான விபரங்களிலிருந்து வேறுபட்டதொன்றாகும். மேலும், கலாத்தியர் 1ம் அதிகாரத்தில் தனது அழைப்பு எரேமியாவின் அழைப்புக்கு ஒத்ததாக பவுல் பேசுகின்றார். நேரடியாக கடவுளிடமிருந்து அழைப்பைப் பெற்றதாகவும் வலியுறுத்துகின்றார். எரேமியா 1:1-10 வரையுள்ள பகுதியில் கட்டவும், இடிக்கவும், நடவும், பிடுங்கவும் கடவுள் தன்னை அழைத்ததாக கடவுள் தன்னை அழைத்ததாக பவுல் பேசுகின்றார்.

• பவுலின் மனமாற்ற நிகழ்வு ஓர் மறுரூப அனுபவமே. ஏனெனில், பவுலுக்கும் யூத உலகம், கிரேக்க உலகம், உரோம உலகம் ஆகிய மூன்று உலகங்களில் செல்வாக்குகள் அதிகளவில் காணப்பட்டன. தமஸ்கு அனுபவம் ஓர் கிறிஸ்தவ அனுபவமாகும். உயிர்த்தெழுந்த கிறிஸ்துவை நேரடியாக சந்தித்த சீடர்கள் வரிசையில் பவுலும் இடம்பிடிக்கின்றார். இயேசுவின் விண்ணேற்றத்திற்குப் பின்னர் பவுலினுடைய இந்த அனுபவம் மிகவும் முக்கியமானதொன்றாகும். எனினும், பவுல் ஓர் சமயத்திலிருந்து இன்னொரு சமயத்திற்கு மாறவில்லை. மாறாக, யூத சமயத்திலிருந்த ஓர் இறை கொள்கையையே தமஸ்கு அனுபவத்திற்கு பின்னரும் கொண்டிருந்தார். யூதர்கள் மத்தியிலேயே நற்செய்தியை முதலில் தொடர்ந்தும் எடுத்துச் சென்றார். தனது எழுத்தேடுகளில் யூத திருமறையின் செப்துவஜிந் மொழிபெயர்ப்பையே பயன்படுத்துகின்றார். யூத பண்டிகைகளை நினைந்து வந்தார். இப்படிப்பட்ட பல்வேறுபட்ட தன்மைகள் தொடர்ச்சியாக பவுலிடத்தில் காணப்பட்டதை மறந்துவிட முடியாது. உரோமையர் 5ம் அதிகாரத்தில் யூத நியாயப்பிரமாணம் வலுவானது என்ற எண்ணக்கருவையும் அது பரிசுத்தமானது என பவுல் கூறுகின்றார்.

• பவுலின் மனமாற்றம் என்பது ஓர் சிந்தனை மாற்றமே. இதுவரை சிலுவையில் அறையப்பட்ட இயேசு சபிக்கப்பட்டவர் எனக் கூறிய பவுல் இப்பொழுது அவரை மேசியா எனக் காண்கிறார். நீதிச்சட்டம் அல்லது நியாயப்பிரமாணம் தன்னில் தானே வலுவற்றது என எண்ணுகின்ற பவுல் இப்பொழுது நீதிச்சட்டங்கள் கிறிஸ்துவில் நிறைவடைகின்றது எனப் பேசுகின்றார். கிறிஸ்துவண்டை எம்மை அழைத்துச் செல்லும் ஓர் உபாத்தியாயனாக நீதிச்சட்டம் காணப்படுகின்றது என்கிறார். பேதுருவை யூதர்களுக்கான நற்செய்திப் பணியாளன் என வர்ணிக்கும் பவுல், தன்னை புற இனமக்களுக்கான அல்லது யூதர் அல்லாதவருக்கான திருப்பணியாளன் என எடுத்துக் காண்பிக்கின்றார். பவுல் ஓர் நற்செய்திபணியாளனாக மாத்திரமன்றி ஓர் இறையியலாளனாகவும் எழுத்தாளனாகவும் காணப்படுகின்றார். சிறப்பாக, பவுலின் பெயர்கள் அடங்கிய திருமுகங்கள் புதிய ஏற்பாட்டில் முக்கியமானவைகள் ஆகும். அவர் கொரிந்து திருச்சபை மற்றும் ஏனைய திருச்சபையில் காணப்படுகின்ற பிரச்சினைகளுக்கு தீர்வாக தனது திருமுகங்களை எழுதியுள்ளார். அதில் காணப்படுகின்ற விடைகள் அல்லது தீர்வுகள் முழு உலகத்திற்கும் பொருத்தமானவைகள் அல்ல. அவைகள் ஒரு சூழல் சார்ந்தவைகளாகவே காணப்படுகின்றன. இத்தகைய பின்னணியிலேயே பவுலை நாங்கள் கற்றுக்கொள்ள வேண்டும். அவருடைய நற்செய்திப்பணி, இறையியற்பணி, கல்விப்பணி, எழுத்துப்பணி இன்றும் உயிரோட்டம் உள்ளவைகள் ஆகும்.

ஆக்கம்: அற்புதம்